அமெரிக்காவின் நாசா நிறுவனம், கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் மூலம் செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்து வருகிறது. இந்த நிலையில், வானில் பறந்து செல்லும் பொருட்கள், விண்கல் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் ஸ்காட் சி வேரிங் என்பவர் தன்னுடைய இணையதளத்தில் செவ்வாய் கிரகத்தில் ஏலியன் இருப்பதாக கூறியுள்ளார்.

இருப்பினும், அந்த போட்டோ செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமா என்பது தொடர்பாக பலர் வாதாடி வருகின்றனர். கனடாவில் உள்ள தேவான் தீவில் நாசா நிறுவனம் ரோவர் விண்கலத்தை சோதனை செய்த போது எடுத்த புகைப்படமாகக் கூட அது இருக்கலாம் என்றும் ஸ்காட் தெரிவித்துள்ளார்.

ஸ்காட் கூறும் புகைப்படத்தில் கழுகு போன்ற பெரிய பறவை கருப்பாக தென்படுகிறது. செவ்வாய் கிரகத்தின் செந்நிற சுற்றுவெளி அச்சு அசலாக புகைப்படத்தில் தெரிகிறது. இதை வைத்து பார்க்கும் போது, உண்மையில் செவ்வாய் கிரகத்தில் ஏலியன்கள் இருக்கலாம் என்று ஒரு சாரார் வாதாடுகின்றனர்.

இதனிடையே ஸ்காட் குறிப்பிடும் போட்டோ வைரலாக பரவி வருகிறது. ஆனால், நாசா தரப்பில் இருந்து எந்தவித விளக்கங்களும் அளிக்கப்படவில்லை. இதற்கு முன்பு இதே போன்று செவ்வாய் கிரகத்தில், போர் கவசம் ஆயுதம் ஏந்திய ஏலியன் இருப்பது போன்ற புகைப்படம் வைரலானது குறிப்பிடத்தக்கது.