வட­மா­காண மக்­கள் அபி­வி­ருத்தி கேட்­டுப் போரா­டு­வ­தில்லை. மாறாக அதி­கா­ரம் வேண்­டும், அடை­யா­ளம் வேண்­டும் என்­று­தான் இங்­குள்ள மக்­கள் போரா­டு­கின்­ற­னர் என்­றுள்­ளார் வட­மா­காண ஆளு­நர் றெஜி­னோல்ட் குரே.

கிளி­நொச்சி மாவட்­டத்­தில் உள்­ளு­ராட்­சிச் சபை­க­ளில் சுயேட்­சை­யா­கப் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்ற சமத்­து­வம் சமூக நீதிக்­கான மக்­கள் அமைப்­பின் பிர­தேச சபை உறுப்­பி­னர்­க­ளுக்­கும் ஆளு­ந­ருக்­கும் இடை­யில் வியா­ழ­னன்று நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டுள்­ளார் குரே.

தென்­னி­லங்கை மக்­கள் வீதி வசதி, தண்­ணீர் வசதி, உயர் கல்வி என்­பவை கோரித்­தான் போரா­டு­கின்­ற­னர். ஆனால் வடக்­கிலோ அடை­யா­ளத்­துக்­கும் அதி­கா­ரத்­துக்­கும் மட்­டுமே போரா­டு­கின்­ற­னர் என்­ற­வா­றாக அந்­தச் சந்­திப்­பில் சாடி­யுள்­ளார் அவர். வடக்கு ஆளு­நர் என்ற அடிப்­ப­டை­யில் குரே­யின் கருத்து மிக­வும் கன­தி­யா­னது. பன்­னாட்­டுச் சமூ­கம் வரை­யும் பாயக்­கூ­டிய வல்­லமை அதற்­குண்டு. வடக்­கில் உள்ள முக்­கிய மக்­கள் பிர­தி­நிதி என்ற வகை­யில் அவர் தனது வார்த்­தை­களை கூடு­தல் கவ­னத்­து­டன் வெளிப்­ப­டுத்­தல் வேண்­டும். மாறாக ஒப்­பீ­டு­கள் அது­வும் கண்­மூ­டித்­த­ன­மான ஒப்­பீ­டு­கள் கூட­வே­கூ­டாது.

30 வரு­ட­கால ஆயு­தப் போர் வடக்­கின் வாழ்­வா­தா­ரத்­தை­யும், பொரு­ளா­தா­ரத்­தை­யும் புரட்­டிப் போட்­டுள்­ளது. போரால் ஒட்­டு­மொத்த இலங்­கை­யும் பாதிக்­கப்­பட்­டது என்­ப­தற்கு எவ­ரி­ட­மும் மாற்­றுக் கருத்து இல்லை. ஆயி­னும் வேறு எந்த மாகா­ண­மும் அடைந்­தி­ராத சேதத்தை, இழப்பை, துன்­பி­யலை, பேர­வ­லத்தை வடக்கு மாகா­ணம் சந்­தித்­தது என்­பது மலை­யில் ஏற்றி வைத்த தீபம்.

எனவே தமது பொரு­ளா­தா­ரம் இன்ன நிலை­யில்­தான் உள்­ளது என்­பதை தமிழ் மக்­கள் போராடி வெளிப்­ப­டுத்­தித்­தான் அது கொழும்­புக்­குத் தெரிய வேண்­டு­மென்­பது அல்ல. வடக்கு மாகா­ணத்­தின் பொரு­ளா­தா­ரம் அத­ல­பா­தா­ளத்­துக்­குள்­தான் உள்­ளது என்­பது இந்­தத் தீவின் ஆகக்­கூ­டிய அதி­கா­ரபீட­மான அரச தலை­வ­ருக்­கும் வெட்ட வெளிச்­சம். இதை அரச தலை­வரும் பல­முறை தெரி­வித்­தி­ருக்­கி­றார். எனின், வடக்கு மக்­கள் வேறு எவரது கவ­னத்தை ஈர்க்க வேண்­டும் என்று குரே குறிப்­பி­டு­கி­றார்?. தான் சார்ந்த அரசு இதய சுத்­தி­யு­டன்­தான் செயற்­ப­டு­கி­றதா என்­பதை ஆளு­நர் ஒன்றுக்குப் பல­முறை சிந்­தித்­துப் பார்க்க வேண்­டும்.

உணவு என்­பதை விட உரிமை என்­பதை மூச்­சா­கக் கொண்­ட­வர்­கள் தமி­ழர்­கள். ஆக, அடை­யா­ளத்­துக்­கும், அதி­கா­ரத்­துக்­கு­மான தேடல் அவர்­க­ளுக்கு இருக்­கத்­தான் செய்­யும். தென்­னி­லங்கை மக்­கள் இனப் பாகு­பாட்­டு­டன் நடத்­தப்­ப­டு­வ­தில்லை, புதிய அர­ச­மைப்­புக்கு உரிய தேவை அவர்­க­ளுக்கு இல்லை, பெரும்­பான்மை மக்­கள் என்ற வகை­யில் அவர்­கள் முழு அதி­கா­ரத்­து­டன் உள்­ளார்­கள். ஆக, அதி­கா­ர­மும் அடை­யா­ள­மும் அவர்­க­ளுக்கு உண்டு.

எனவே அவர்­கள் அபி­வி­ருத்தி கோரிப் போரா­டு­கி­றார்­கள். ஆனால் தமிழ் மக்­கள் தமது அதி­கா­ரத்­தை­யும், அடை­யா­ளத்­தை­யும் இழந்த, இழக்­கின்ற நிலை­யில்­தான் உள்­ளார்­கள். எனவே அபி­வி­ருந்தி என்­ப­தைக் காட்­டி­லும் அதி­கா­ர­மும், அடை­யா­ள­மும் அவர்­க­ளுக்­குப் பெரி­தாய்த்தான் தெரி­யும்.

அடை­யா­ளத்­தை­யும், அதி­கா­ரத்­தை­யும் தொலைத்த அபி­வி­ருத்தி எதற்கு?. சுருங்­கச் சொல்­லின் , காலுள்­ள­வன் செருப்­புக்கு அழு­வான்; காலில்­லா­த­வன் காலுக்­குத்­தான் அழு­வான் என்கிற நிலைப்பாடுதான் இது. இந்த வேறு­பாட்டை ஆளு­நர் புரிந்­து­கொள்ள வேண்­டும். அர­சி­யல் ரீதி­யில் பெரும்­பான்மை மக்­க­ளுக்கு நிக­ரா­கத் தமி­ழர்­கள் நடத்­தப்­ப­டு­கி­றார்­களா என்­பதை உறு­திப்­ப­டுத்­திய பின்­னர், அவர் தனது ஒப்­பி­டலை மேற்­கொள்ளவேண்­டும்.