ஐக்கிய அரபு எமிரேட் கடலோரத்தில், சௌதி எண்ணெய்க் கப்பல்கள் இரண்டு நாசவேலையால் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக சௌதி எண்ணெய் வளத்துறை அமைச்சர் காலித் அல் ஃபாலி கூறியுள்ளார்.

அறிக்கை ஒன்றில் இதைத் தெரிவித்த அவர், ஃபுஜைரா துறைமுகம் அருகே நடந்த இந்த சம்பவத்தில் எண்ணெய் கப்பல்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் சேதாரம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நான்கு கப்பல்கள் தாக்கப்பட்டதாகவும் ஐக்கிய அரபு எமிரேட் தெரிவித்துள்ளது. ஆனால் யாருக்கும் உயிரிழப்போ, காயங்களோ இல்லை.

இந்த சம்பவங்கள் கவலையளிப்பதாகவும், அச்சுறுத்துவதாகவும் இருப்பதாக கூறியுள்ள இரான், இது குறித்து முழு விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கூறியுள்ளது.

அந்த பகுதியில் பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சர்வதேச அளவில் பயன்படுத்தக் கூடிய ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் அந்த பகுதியின் வழியாகதான் செல்கிறது.

தனது படைகளுக்கும், கடல் வழிப் போக்குவரத்துக்கும் இரானால் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டிருப்பதற்கு உறுதியான அறிகுறிகள் இருப்பதாக கூறி அந்தப் பகுதியில் கடந்த சில நாள்களில் அதிக போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ளது அமெரிக்கா.

ஆனால் அந்த குற்றச்சாட்டுகள் அபத்தமானது என்று இரான் தெரிவித்துள்ளது.

இரானின் எண்ணெயை வாங்குவதற்கு விதிக்கப்பட்ட தடையில் இருந்து அந்நாட்டின் முக்கிய இறக்குமதியாளர்களுக்கு மேற்கொண்டு விதிவிலக்கு அளிக்க முடியாது என்று கடந்த மாதம் அமெரிக்கா அறிவித்ததை அடுத்து, ஹார்மூஸ் ஜலசந்தியை பயன்படுத்துவதில் இருந்து தாங்கள் தடுக்கப்பட்டால், அந்த நீர்த்தடத்தை மூடிவிடப்போவதாக இரான் தெரிவித்திருந்தது.

ஐக்கிய அரபு எமிரேட் கடற்பகுதிக்கு உட்பட்ட ஓமன் வளைகுடாவில் ஞாயிறன்று இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

“அடையாளம் காணப்படாத நான்கு வர்த்தக கப்பல்கள் நாச வேலையால் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. ஆனால் உயிரிழப்புகளோ, ரசாயனங்கள் கசிவோ ஏற்படவில்லை.” என ஐக்கிய அரபு எமிரேட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஃபுஜெய்ரா துறைமுகத்தில் தீ விபத்து மற்றும் வெடி விபத்துக்கள் ஏற்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டதை, “ஆதாரமற்ற மற்றும் உறுதிப்படுத்தப்படாத” செய்தி என்று கூறி அமைச்சரகம் மறுத்துள்ளது.