ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 39-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரரான பார்திவ் படேல் பொறுப்புடன் விளையாடி 53 ரன் எடுத்து அவுட்டானார்.

சென்னை அணி சார்பில் தீபக் சாஹர், ஜடேஜா, பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், தாஹிர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. ஐதராபாத் அணியினர் துல்லியமாக பந்து வீசினர். வாட்சன், டு பிளசிஸ் ஆகியோர் 5 ரன்னிலும், சுரேஷ் ரெய்னா ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகினர். இதனால் 17 ரன்கள் எடுப்பதற்குள் முக்கியமான 3 விக்கெட்டுகளை இழந்தது.

அடுத்து இறங்கிய அம்பதி ராயுடுவுடன், கேப்டன் டோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. ராயுடு 29 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து இறங்கிய கேதார் ஜாதவ் 9 ரன்னிலும், ரவீந்திர ஜடேஜா 11 ரன்னிலும் வெளியேறினர்.

தனி ஒருவனாக போராடிய டோனி அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 84 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 160 ரன் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.