ட்விட்டர் துவங்கப்பட்ட காலத்தில், இந்த வலைதளம் பிரபலங்கள் மட்டும் பயன்படுத்தும் தளமாக இருக்கும் போல என்ற கருத்து பரவலாக பரவியிருந்தது.
பின் படிப்படியாக ட்விட்டர் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயனர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், ட்விட்டர் பயன்பாடுகளில் அந்நிறறுவனம் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது.
ட்விட்டர் பயன்படுத்த துவங்கிய காலக்கட்டத்தில் ஒரே சமயத்தில் தொடர்ந்து அதிகப்படியான ட்விட்களை பதிவிட்டு, தற்சமயம் அவை அர்த்தமற்றதாக உணர்கிறீர்களா?
ட்விட்டரில் நீங்கள் பதிவிட்ட ட்விட்களை ஒரே சமயத்தில் அழிப்பது சிரமமான காரியமாக தெரிகிறதா, கவலை வேண்டாம். நீங்கள் பதிவிட்ட ட்விட்களை இனியும் மற்றவர்கள் பார்க்க வேண்டாம் என முடிவு செய்துள்ளீர்களா?
அப்படியெனில் இந்த தொகுப்பு உங்களுக்கானது தான். சமூக வலைதளங்களில் இருந்து சற்று தள்ளியிருக்கவோ அல்லது சில காலம் தனிமைப்படுத்திக் கொள்ள நினைக்கிறீர்களா. அப்படியெனில் உங்களது ட்விட்களை ஒரே சமயத்தில் அழிக்க பல்வேறு சேவைகள் இருக்கின்றன.
ட்விட்டர் டைம்லைனில் 3200 ட்விட்கள் மட்டுமே தெரியும் என்றாலும், உங்களது பழைய ட்விட்களை சர்ச் கன்சோலில் இருந்து தேடினால் அவை கிடைக்கும்.
உங்களது அனைத்து ட்விட்களையும் அழிக்க நினைக்கும் பட்சத்தில், அவற்றை டவுன்லோடு செய்து பேக்கப் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு நீங்கள் டவுன்லோடு செய்யும் சிப் ஃபைல் அனைத்து ட்விட்கள் மற்றும் ரீட்விட்களையும் கொண்டிருக்கும்.
உங்களின் ட்விட்டர் ஆர்ச்சிவ் ஃபைலை டவுன்லோடு செய்ய பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்:
1) முதலில் ப்ரோஃபைல் படத்தை கிளிக் செய்து செட்டிங்ஸ் மற்றும் பிரைவசி ஆப்ஷன்களை இயக்க வேண்டும்
2) கீழ் புறம் ஸ்கிரால் செய்து பக்கத்தின் கீழ் பகுதியில் இருக்கும் Request your archive ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
3) இனி உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும், அதில் உங்களது விவரங்கள் இருக்கும் டவுன்லோடு செய்யக்கூடிய ஃபைலாக இடம்பெற்றிருக்கும்
ட்விட்டெலீட் (TweetDelete) சேவையை கொண்டு உங்களின் அனைத்து ட்விட்களையும் அழிக்க முடியும். மேலும் எதிர்காலத்தில் நீங்கள் பதிவிடும் ட்விட்களை குறிப்பிட்ட காலத்திற்கு பின் தானாக அழிந்து போக செய்ய முடியும். எனினும் மூன்றாம் தரப்பு சேவை என்பதால் சமீபத்தில் பதிவிட்ட 3200 ட்விட்களை மட்டுமே அழிக்க முடியும்.
உங்களது எதிர்கால ட்விட்களை அழிக்க குறைந்த பட்சம்: ஒரு வாரம், இரண்டு வாரங்கள், ஒரு மாதம், இரண்டு மாதங்கள், மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள், ஒரு வருடம் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
ட்விட்டெலீட் உங்களின் அக்கவுன்ட்டை ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் ஒருமுறை சரிபார்க்கும். ட்விட்டர் செட்டிங்ஸ் மற்றும் பிரைவசி ஆப்ஷன்கள் சென்று இதற்கான அனுமதியை மாற்றியமைக்கலாம்.