கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னரின் தடையை நீக்க வேண்டும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் அமைப்பு அழுத்தம் கொடுத்து வருகிறது. பந்து சேத விவகாரத்தில் சிக்கிய வார்னர், ஸ்மித், பான்கிராப்ட் ஆகிய கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு தடை விதித்தது. வார்னர், ஸ்மித் இருவருக்கும் ஓராண்டு தடையும், பான்கிராப்ட்டுக்கு ஒன்பது மாத தடையும் விதித்தது.

இதில் முக்கிய வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தின் தடையால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடுமையாக பாதித்துள்ளது. தற்போது இந்த ஓராண்டு தடைக் காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தான் நிறைவடைகிறது.

அதற்கு முன் பிக் பாஷ் டி20 தொடர் மற்றும் முக்கியமான உள்ளூர் தொடர்களும் நடைபெற உள்ளன. உலகக்கோப்பையில் வார்னர், ஸ்மித் பங்கேற்றால் ஒழிய ஆஸ்திரேலியா வெற்றிகள் பெறுவது கடினமே. எனவே, அவர்கள் இந்த உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று தங்கள் பார்மை மீட்டுக் கொள்ள வேண்டும்.

இதை முன்வைத்தும், ஓராண்டு தடை என்பது மிகவும் அதிகம் என்பதை முன்வைத்தும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் அமைப்பு, கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பிற்கு மனு ஒன்றை அளித்துள்ளது. அதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகமும் பரிசீலிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

சில தினங்களாக பந்து சேத விவகாரத்தின் போது பதவியில் இருந்த சில முக்கிய நிர்வாகிகள் பதவி விலகி வருகின்றனர். இதன் பின்னணியில் அனேகமாக ஓராண்டு தடை நீக்கப்படும் என கணிக்கப்பட்டது, அதற்கேற்றார்ப் போல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஸ்மித், வார்னர் மீண்டும் அணிக்குள் வந்தாலும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் மனதளவில் ஏற்பட்ட சோர்வில் இருந்து மீளுமா? என்பது சந்தேகமே.