சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளதால் லாரிகள் மூலம்தான் பல இடங்களுக்கு தண்ணீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. தினமும் 1,500 லாரிகள் மூலம் மொத்தம் 10 ஆயிரம் நடைகள் சென்று தண்ணீர் வினியோகத்தில் லாரிகள் ஈடுபட்டு வருகின்றன. இதில் 900 லாரிகள் சென்னை குடிநீர் வாரியத்துக்காக ஓடுகின்றன. 600 லாரிகள் தனியார் வசம் உள்ளது.

தனியார் லாரிகள் பெரும்பாலும் சென்னையை அடுத்த பூந்தமல்லி, திருப்போரூர், நாவலூர், பெரியபாளையம், திருமழிசை, ஆவடி, சென்னீர்குப்பம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் ராட்சத போர்வெல் அமைத்து தண்ணீர் கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். இதற்கு பல இடங்களில் உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம் நடத்துவதுடன் லாரிகளை சிறைபிடித்தும் வருகின்றனர். அனுமதியின்றி சட்டவிரோதமாக தண்ணீர் எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதாக பொதுமக்கள் போலீசில் புகார் செய்தும் வருகின்றனர்.

இதனால் மக்களின் எதிர்ப்பை சமாளிக்க தனியார் லாரி டிரைவர்களை போலீசார் பல இடங்களில் கைது செய்தும் வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், எங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனப்தையும் வலியுறுத்தி தனியார் லாரி உரிமையாளர்கள் நாளை முதல் (8-ந்தேதி) வேலை நிறுத்த போராட்டத்தில் (ஸ்டிரைக்) ஈடுபட போவதாக அறிவித்தனர்.

இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் நிறுவனங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அதிகாரிகள் முயற்சி செய்து வந்தனர். இந்நிலையில் லாரி உரிமையாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்ட அறிவிப்பை வாபஸ் பெறுவதாக தண்ணீர் லாரி உரிமையாளர்களின் தலைவர் நிஜலிங்கம் அறிவித்துள்ளார்.

இதனால் வழக்கம்போல் சென்னைக்கு தனியார் லாரிகள் மூலம் குடிநீர் தங்குதடையின்றி கிடைக்கும்.