இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி கவிழ்ப்பிற்கும், தனது இந்திய பயணத்திற்கும் இடையில் எந்தவித தொடர்பும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு – விஜயராம பகுதியிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில், தமிழ் ஊடகவியலாளர்களை இன்று (செவ்வாய்க்கிழமை ) காலை சந்தித்தபோது, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு முன்னர் மேற்கொண்ட இந்திய பயணத்திற்கும், ஆட்சி கவிழ்ப்பிற்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என்ற கேள்விக்கு அளித்த பதிலில் அவர் இதனைக் கூறியிருந்தார்.

இதேவேளை, தான் ஆட்சி பீடம் ஏறும் பட்சத்தில், தமிழ் மக்களுடன் நேரடியாக கலந்துரையாடல்களை நடத்தி, அரசியல் தீர்வை பெற்று கொடுக்கப் போவதாக முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியடைந்ததற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் எனவும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.