கமல்ஹாசன் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இணைய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.

டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அழகிரி, பின்னர் நிருபர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:

மதசார்பற்ற கட்சிகள் எல்லோருமே எங்கள் கூட்டணிக்கு வரலாம். கமல்ஹாசன் போன்றவர்கள் எங்கள் அணியில் இருந்தால் நல்லது என நினைக்கிறேன்.

தன்னை ஆரம்பகாலத்தில் இருந்தே, இடதுசாரியாகவும், மதசார்பற்ற தன்மையுள்ளவராக காட்டி வருபவர் கமல்ஹாசன். எனவே மதச்சார்பற்ற எங்களின் கூட்டணிக்கு கமல்ஹாசன் கட்சியும் வருவதே இயல்பான கூட்டணியாக அமையும்.

மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்துமே, திமுக-காங்கிரஸ் கூட்டணியில்தான் உள்ளன. பாஜக, அதிமுக போன்ற கட்சிகள்தான், எங்கள் கூட்டணியில் இல்லை. எனவே, கமல்ஹாசன் கட்சி, தனித்து நின்றால், மதச்சார்பற்ற வாக்குகள் சிதறும் என்பதால், கூட்டணிக்கு அழைக்கிறோம். இவ்வாறு டெல்லியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டியளித்தார்.

ஆனால் கமல்ஹாசனோ, அண்மையில், திமுக அழுக்குமூட்டை கட்சி என்றும், அதனுடன் கூட்டணி இல்லை என்றும் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். திமுக, அதிமுக ஆகிய இரண்டுமே ஊழல் கட்சிகள்தான் என்பதால், இரண்டுமே அகற்றப்பட வேண்டியவை எனவும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கமல்ஹாசன் இவ்வாறு கூறிய பிறகும், காங்கிரஸ் கட்சியோ, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை திமுக கூட்டணியில் சேர்த்துவிட முனைப்பு காட்டுவதையே அழகிரியின் இன்றைய பேட்டி எடுத்துக்காட்டுகிறது.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அவர் கூறுகையில், அழகிரி நல்லெண்ண அடிப்படையில் இவ்வாறு கூறியிருப்பார். கமல்ஹாசனோ, திமுகவிற்கும், அதிமுகவிற்கும் எதிரான கருத்துக்களை பேசி வருகிறார். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.