இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் வென்றது. அறிமுக வீரர் ரீசா ஹென்ரிக்ஸ் தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்தார். தென்னாபிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் மோசமான தோல்வியை அடைந்தது தென்னாபிரிக்கா. அதனை தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளையும் தென்னாபிரிக்கா அணி வென்ற நிலையில் மூன்றாவது போட்டி பலகல்லேவில் நடைபெற்றது.

தென்னாபிரிக்கா அணியில் தொடர்ந்து சொதப்பும் ஏதேன் மார்க்ரமக்கு பதிலாக அறிமுக வீரர் ரீசா ஹென்ரிக்ஸ் இடம் பெற்றார். முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா அணி இலங்கை பந்துவீச்சை துவம்சம் செய்து 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 363 ரன்களை குவித்தது. அறிமுக வீரர் ஹென்ரிக்ஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். டுமினி அதிரடியாக விளையாடி 92 ரன்களையும், மில்லர் 51 ரன்களையும் குவித்தனர். 364 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 45.2 ஓவர்களில் 285 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் டி சில்வா 84 ரன்களை எடுத்தார். தென்னாபிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் நிகிடி 4 விக்கெட்களை வீழ்த்தினார். ஆட்டநாயகன் விருதை அறிமுக வீரர் ரீசா ஹென்ரிக்ஸ் பெற்றார்.