உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பில் தெரிவுக்குழு முன் சாட்சியம் வழங்குவதற்கு பிரதமருக்கு உத்தியோகபூர்வ அழைப்போ அல்லது திகதியோ இன்னமும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிரி, ஜனாதிபதிக்கும் தெரிவுக்குழு முன்நிலையில் ஆஜராகும்படி அழைப்பு விடுக்கவில்லை என குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், இதுவரையில் பலரும் தெரிவுக்குழு முன்நிலையில் ஆஜராகி சாட்சியம் வழங்கியிருக்கிறார்கள்.

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருவரும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் சாட்சியம் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உள்ளிட்ட சில தரப்புக்களால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது.

இத்தகைய பின்னணியில் நேற்று வெள்ளிக்கிழமை விசேட அறிக்கையொன்றை பிரதமர் வெளியிட்டிருக்கிறார்.

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பில் எம்மிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை. அது குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழு எனக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

நான் தெரிவுக்குழு முன்சென்று எனக்குத் தெரிந்த தகவல்களை வழங்குவேன். நாங்கள் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக உண்மைகளை வெளிக்கொண்டு வருவோம் என்று அவ்வறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.