பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி தனது விசாரணையை துவக்கி உள்ளது.

தமிழகத்தை உலுக்கிய, பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் மற்றும் அது சார்ந்த வீடியோ விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக தமிழக அரசு நேற்று அறிவித்தது.

இதையடுத்து சிபிசிஐடி ஐஜி ஸ்ரீதர் தலைமையிலான அதிகாரிகள் குழு இன்று பொள்ளாச்சியில் தனது விசாரணையை தொடங்கி உள்ளது. பொள்ளாச்சியில் உள்ள திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் ஏகப்பட்ட ஆணுறைகள் இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், பண்ணை வீட்டில் நடத்தப்பட்ட சோதனை முக்கியமானதாகும்.இந்த வழக்கில் திருநாவுக்கரசு உட்பட நான்கு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது தொடர்பாகவும், அரசியல் பின்புலம் மற்றும் ஆதரவு தொடர்பாகவும் சிபிசிஐடி விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே உள்ளூர் காவல்துறை இதுவரை திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் சோதனை நடத்தாமல் இருந்தனர் என்பது ஏன் என்பது புரியவில்லை. அதே நேரம், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி இந்த விவகாரத்தில் சுதந்திரமாக விசாரிக்க முடியாது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிபிசிஐடி விசாரணை இன்று துவங்கியுள்ள நிலையில், அந்த விசாரணை எந்த கோணத்தில் செல்கிறது என்பதை எதிர்க்கட்சிகள் உற்று நோக்கி வருகின்றன.