கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து இன்று (18) மற்றும் நாளைய (19) தினங்களில் சுகயீன விடுமுறை மூலமான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக, ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் சில அறிவித்துள்ளன.

4 கோரிக்கைகளை முன்வைத்து இந்த சுகயீன விடுமுறைத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்ததாக, இலங்கை பொதுஜன கல்வி சேவைகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

சம்பள முரண்பாடுகளை நிவர்த்தித்தல், கல்விக்காக 6 வீதம் நிதியொதுக்குவதாகத் தெரிவித்த இந்த ஆட்சியின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை, 2016ஆம் ஆண்டிலிருந்து சேவையில் இணைத்துக் கொள்ளப்படும் ஆசிரியர்களுக்கான ஓய்வூதியத்தை நிறுத்தியமை ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றும் நாளையும் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

எனினும், இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையில் தாம் உள்ளிட்ட பெரும்பாலான தொழிற்சங்கங்கள் ஈடுபடவில்லை என, இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.