இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலம் என்ற நிலையில் இருந்து, அதிகாரமற்ற இரண்டு யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், காணொளி மூலம் இந்த உரையை நிகழ்த்தினார் அவர். ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும், லடாக் மக்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்து அவர் பேசத் தொடங்கினார்.

“ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் சகோதர சகோதரிகளின் பல உரிமைகள் மறுக்கப்படக் காரணமாக இருந்த, வளர்ச்சிக்குத் தடையாக இருந்த ஒரு ஏற்பாடு நீக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார் .

ஒரு நாடாக, ஒரு குடும்பமாக ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை எடுத்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

சர்தார் வல்லபாய் பட்டேல், பாபாசாஹிப் அம்பேத்கர், ஜனசங்கத் தலைவர் டாக்டர் ஷியாம பிரசாத் முகர்ஜி, பாஜக வை சேர்ந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயி ஆகியோரின் கனவு தற்போது நனவாகியுள்ளது என்றார் மோடி.

ஜம்மு காஷ்மீரை சிறிது காலத்துக்கு மத்திய அரசின் நேரடி ஆளுகையில் வைத்திருப்பது என்பது யோசித்து எடுக்கப்பட்ட முடிவாகும். ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதில் இருந்து மாநில நிர்வாகம் நேரடியாக மத்திய அரசுடன் தொடர்புகொண்டுள்ளது. இதனால், நல்லாட்சியின் விளைவுகளை களத்தில் பார்க்கலாம் என்றார் மோடி.