நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் வெளிநாட்டுத் தூதுவர்கள் திருப்தி கொண்டிருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு நிலைமை தொடர்பாக நடைபெற்ற மதிப்பீட்டுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய சபாநாயகர் சுற்றுலாப் பயணிகளுக்காக சில நாடுகள் விதித்திருந்த தடை விரைவாக நீக்கப்படும் என்றும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் தொடர்ச்சியாக கூடுதலான கவனத்துடன் செயல்படுவது அத்தியாவசியமாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கையில் அரசியல் இலக்கை கவனத்திற் கொள்ளாது, அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியமானதாகும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் நடவடிக்கைகள் தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹாஸிம் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் உரையாற்றுகையில், நாட்டின் பாதுகாப்புப் பிரிவில் ஆகக் கூடிய ஒத்துழைப்பு அனைத்து மக்களுக்கும் கிட்டியமை பாராட்டப்பட வேண்டிதாகும் என்று தெரிவித்தார்.

பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கல் மற்றும் அந்த நிதி கையாளப்படுகின்றமை குறித்தும், ஆயுதங்கள் உள்ளிட்ட யுத்த உபகரணங்கள் கிடைப்பது தொடர்பாகவும் ஆழமாக விசாரிக்கப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மதத் தலைவர்கள், புத்திஜீவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.