கூகுள் நிறுவனத்தின் தலைவர் தானே என அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

பாலியல் புகார்களுக்கு ஆளான 13 மூத்த அதிகாரிகள் உட்பட 48 பேருக்கும் அதிகமாற பணியாளர்களை கூகுள் நிறுவனம் அண்மையில் பணியிலிருந்து நீக்கியது. அவர்களுக்கு பணிக்கொடையும் வழங்கப்படவில்லை.

ஆனால், இந்தப் பணிநீக்கம் மூலம் பாலியல் புகாரில் சிக்கியவர்களை கூகுள் நிறுவனம் காப்பாற்றப் பார்க்கிறது என அந்நிறுவனத்தின் ஊழியர்கள் பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தங்கள் எதிர்ப்பைக் காட்டும் முகமாக 1000 ஊழியர்களுக்கு மேல் ஒரே நாளில் விடுமுறை எடுத்தனர்.

இந்நிலையில் இந்தப் பிரச்னை குறித்து கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை நியூயார்க் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது, “ஊழியர்களுக்கு அநீதி இழக்கப்படும்போது மற்ற ஊழியர்கள் இணைந்து குரல் கொடுப்பது வரவேற்க வேண்டியதுதான்.” என்றார்.

மேலும், “பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையானதை செய்துள்ளோம். கூகுள் நிர்வாகத்தின் செயல்பாடு விருப்பு, வெறுப்பு இல்லாமலே நடக்கிறது. ஒவ்வொரு விஷயத்திலும் வாக்கெடுப்பு நடத்தி, முடிவு செய்யும் முறையில் ஒரு நிறுவனத்தை நடத்த முடியாது. நான்தான் இப்போதும் உங்கள் உயர் அதிகாரி என்பதை ஊழியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்றும் சுந்தர் பிச்சை கேட்டுக்கொண்டார்.