ஒருவருக்கு இரவு நேரத்தில் நல்ல போதுமான தூக்கம் கிடைத்தாலே, அவர் நன்கு ஆற்றலுடன் சுறுசுறுப்பாக செயல்படுவார். தூக்கமானது உடலுக்கு ஓய்வு கொடுப்பதோடு, மனதை புத்துணர்ச்சி அடையச் செய்யும். நாள் முழுவதும் உழைத்து களைத்த பின், மறுநாள் மீண்டும் புத்துணர்வுடன் செயல்பட தூக்கம் மிகவும் இன்றியமையாதது.

ஆனால் தற்போது பலர் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இரவு முழுவதும் தூங்க முயற்சித்தே பலருக்கு விடிந்துவிடுகிறது. இதன் விளைவாக தூக்கமின்மை என்னும் நிலையால் பாதிக்கப்பட்டுவிடுகின்றனர். மேலும் தூக்கம் ஒருவருக்கு போதுமான அளவு கிடைக்காவிட்டால், அதுவே பல நோய்களுக்கு வழிவகுத்துவிடும்.

முக்கியமாக இரவு நேரத்தில் தூங்காமல் இருப்பதால், பகல் வேளையில் சரியாக செயல்படாமல் போய், நாள் முழுவதுமே சோர்வுடன் இருக்க நேரிடுகிறது. இதனால் அன்றாட வேலைகளைக் கூட சரியாக செய்ய முடியாமல் போகிறது. இந்த கட்டுரையில் தூக்கமின்மை பிரச்சனையிலிருந்து விடுபட உதவும் சில எளிய இயற்கை வழிகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

தியானம் மனதை அமைதிப்படுத்துவதோடு, ஒட்டுமொத்த உடலையும் ரிலாக்ஸ் அடையச் செய்யும். மேலும் இது மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு, இரவு நேரத்தில் நல்ல தூக்கத்தைப் பெற உதவும். ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது என்பது ஆரம்பத்தில் கடினமான ஒன்றாக இருக்கலாம். ஆனால் தினமும் மேற்கொண்டு வந்தால், அதுவே உங்களை நிபுணராக்கிவிடும். எனவே தினமும் காலையில் சிறிது நேரத்தை ஒதுக்கி, தவறாமல் தியானம் செய்து வாருங்கள்.

லாவெண்டர் எண்ணெய் தூக்கத்தை ஊக்குவிக்கும். இந்த எண்ணெய் மனநிலையை மேம்படுத்துவதோடு, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும். அதற்கு இந்த எண்ணெயை சுவாசிக்கவும் அல்லது தலையணையில் இந்த எண்ணெய் துளிகளை தெளித்து விடவும். வேண்டுமானால் லாவெண்டர் டீ தயாரித்துக் கூட குடிக்கலாம். இல்லாவிட்டால், லாவெண்டர் எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, நெற்றிப் பகுதியில் மசாஜ் செய்யலாம்.

உடலை ரிலாக்ஸ் அடைய வைக்கும் ஒரு வழி தான் மசாஜ். மேலும் இது மிகச்சிறந்த மன அழுத்த நிவாரண முறையும் கூட. ஒருவர் மசாஜ் செய்வதற்கு எண்ணெய் அல்லது க்ரீம்மை தேர்வு செய்யலாம். அதிலும் நறுமணமிக்க எண்ணெய்களைப் பயன்படுத்தினால், மன அழுத்தம் நீங்குவதோடு, இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம். அதுவும் நறுமண எண்ணெய்களை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து பயன்படுத்துங்கள்.

பொதுவாக உடற்பயிற்சி பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கும். தூக்கமின்மையின் அறிகுறிகளை அன்றாட உடற்பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்த முடியும். ஆகவே ஒருவர் தினமும் போதுமான உடற்பயிற்சி அல்லது வீட்டு வேலைகளை செய்ய வேண்டியது மிகவும் அவசியம். இதன் மூலம் சோம்பேறித்தனத்துக்கு குட்-பை சொல்லலாம். எனவே நல்ல நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தையும், ஆரோக்கியமான உடலையும் பெற தினமும் காலையில் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அமினோ அமிலங்கள் களைப்பைப் போக்கி, உடலுக்கு ரிலாக்ஸ் அளித்து, நல்ல தூக்கத்தைப் பெறச் செய்யும். தேனில் உள்ள ரிலாக்ஸ் அடைய வைக்கும் பண்புகள், மூளையில் செரடோனின் வெளியீட்டைத் தூண்டி, தூக்க சுழற்சியை சீராக்கும். ஆகவே 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகரை 1 கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து, உறங்கச் செல்லும் முன் குடியுங்கள்.