இறைவனிடம் மட்டுமே பாவமன்னிப்பை கோருங்கள். பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் அவனுக்கு மட்டுமே உண்டு. மனிதர்களுக்கு அவ்வதிகாரம் வழங்கப்படவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “மனிதன் ஒரு பாவம் புரிந்தால், அவன் இதயத்தில் ஓர் கரும்புள்ளி விழுந்துவிடுகிறது. பிறகு அவன் அந்தப் பாவத்தை விட்டு விலகிவிட்டால்… அந்தப் பாவத்தை உணர்ந்து, வெட்கமும் வேதனையும்பட்டு தவ்பா – பாவமன்னிப்பை நாடினால்… ஏக இறைவனின்பால் திரும்பி ‘பாவங்களிலிருந்து தப்பி வாழ்வேன்’ என உறுதியான வாக்குறுதி அளித்தால்… ஏக இறைவன் அவன் உள்ளத்தில் ஓர் ஒளியை உருவாக்குகிறான்.
எனது பாவங்களை இறைவன் மன்னிப்பான் என்ற உறுதியான நம்பிக்கையுடன் பாவமன்னிப்பு கோருங்கள். உங்களுடைய பாவங்கள் கடலின் நுரை அளவு இருந்தாலும் இறைவன் அவற்றை மன்னிப்பான்.

“தங்கள் ஆன்மாக்களுக்கு கேடு இழைத்துக் கொண்ட என் அடிமைகளே! இறைவனின் கருணை பற்றி நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். திண்ணமாக இறைவன் எல்லாப் பாவங்களையும் மன்னித்துவிடுகின்றான். அவன் பெரிதும் மன்னிப்பாளனும் கருணையாளனும் ஆவான், என்ற இறைவசனம் இறைநம்பிக்கையாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்துள்ளது.

இறைவனிடம் மட்டுமே பாவமன்னிப்பை கோருங்கள். பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் அவனுக்கு மட்டுமே உண்டு. மனிதர்களுக்கு அவ்வதிகாரம் வழங்கப்படவில்லை. நீங்கள் ஏன் பாவம் செய்தீர்கள். பாவம் செய்ய உங்களை தூண்டியது எது? என்பவற்றை இறைவன் மட்டும் அறிவான். எனவே அவனிடமே பாவமன்னிப்பு கோருங்கள்.

“அவனே தன் அடிமைகளின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொள்கின்றான். அவர்கள் குற்றங்களைப் பொறுத்தருளுகின்றான். உங்கள் செயல்கள் அனைத்தையும் அறிகின்றான்” என்று குர்ஆன் (42:25) கூறுகிறது.

பாவமன்னிப்பு கோருதலை தாமதப்படுத்தாதீர்கள். நமது வாழ்வு என்று முடிவுக்கு வரும் என்பது நமக்குத் தெரியாது. நபிகள் நாயகம் (ஸல்) நவின்றார்கள்: “இறைவன் இரவில் தன் கையை நீட்டுகின்றான்,  மனிதன் பகலில் பாவமிழைத்த பின் இரவில் இறைவன்பால் மன்னிப்புத் தேடி மீளுவதற்காக. மேலும், இறைவன் பகலில் தன் கையை நீட்டுகின்றான்.

மனிதன் இரவில் பாவமிழைத்த பின் பகலில் இறைவன்பால் மன்னிப்புத் தேடி மீளுவதற்காக” (முஸ்லிம்) இறைவனுக்கு அதிக மகிழ்ச்சியை தருவது பாவமன்னிப்பே. அதற்குப் பெயர் தவ்பா. அதன் பொருள் திரும்புதல், மீளுதல் ஆகும். தவறிழைத்த மனிதன் இறைவனிடமிருந்து விலகிச் சென்றுவிட்டான். பின்னர் மனம் திருந்தி பாவமன்னிப்புக் கோருவதால் இறைவனிடம் மீளுகின்றான். அதனைக் கண்டு இறைவன் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றான். எனவே பாவமிழைத்தவர்கள் நம்பிக்கையுடன் படைத்த இறைவனிடம் திரும்புங்கள்.