அமெரிக்காவில் ஒரு தசாப்த காலத்துக்கு மேலாக தன்னுணர்வற்று மருத்துவமனையில் படுக்கையிலே இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது.

சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையில் தலைமை நிர்வாக அதிகாரி தற்போது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

அமெரிக்காவில் ஹஸீண்டா மருத்துவமனையில் ஒரு பெண் நோயாளி நினைவிழந்த நிலையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறார். மருத்துவமனையில் உரிய கவனிப்பில் அவர் உயிரோடு வாழ்ந்து வருகிறார்.

இந்நிகழ்வு தொடர்பாக பாலியல் தாக்குதல் குறித்த விசாரணையை துவங்கியுள்ளது காவல்துறை. பெயர், முகம் வெளியிடப்படாத அப்பெண் கடந்த டிசம்பர் மாதம் 29-ம் தேதி ஒரு குழந்தையை பெற்றெடுத்தார்.

”எனக்கு சொல்லப்பட்ட தகவலின்படி அப்பெண் முனகிக்கொண்டிருந்தார். அப்போது செவிலியர்கள் அவருக்கு என்ன பிரச்சனை எனத் தெரியாமல் திகைத்தனர்” என ஒரு அடையாளம் காட்டப்படாத நபர் அமெரிக்க தனியார் தொலைக்காட்சி சேனலில் தெரிவித்திருக்கிறார்.

”அவர் குழந்தையை பெற்றெடுப்பதற்கு முன்புவரை அப்பெண் கர்ப்பமாக இருந்ததே எந்தவொரு மருத்துவமனை ஊழியருக்கும் தெரியாது” என அந்நபர் தெரிவித்திருக்கிறார்.

இந்த கொடூரமான சூழ்நிலைக்கு முழு பொறுப்பையும் நிறுவனத்தின் நிர்வாக சபை பொறுப்பேற்கிறது என நிறுவனத்தின் துணை செயல் தலைவர் கூறியுள்ளார்.

அந்த மருத்துவமனையில் நோயாளிகள் நிர்வாணமாக இருக்கும்போது அல்லது அவர்களின் உடல்களை துடைக்கும்போதோ போதுமான தனியுரிமை இல்லை என முறைகேடு குறித்து புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக நியூயார்க் டைம்ஸின் செய்திகள் தெரிவிக்கின்றன.