பருவநிலை மாற்றத்தை சமாளிக்கும் நடவடிக்கை குறித்து விவாதிக்க நியூயார்க்கில் ஐநாவின் சிறப்பு மாநாடு சற்று முன்னர் கூடியுள்ள நிலையில், புவி வெப்பமடைதலின் அறிகுறிகளும் தாக்கங்களும் கடந்த சில ஆண்டுகளில் துரிதமாகி வருவதாக ஆய்வறிக்கை ஒன்று எச்சரிக்கை செய்துள்ளது.

வானிலை குறித்த தரவுகள் சேகரிக்கப்படத் தொடங்கியதிலிருந்து இதுவரையிலான காலத்தில், 2014 முதல் 2019 வரையிலான ஐந்தாண்டுகளே மிகவும் வெப்பமானது என்று உலக வானிலை ஆய்வு மையத்தின் தரவறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கார்பன் உமிழ்வின் அளவு புதிய உச்சத்தை தொட்டுள்ளதால் இதே காலக்கட்டத்தில் கடல் நீர்மட்டம் உயர்வதும் துரிதமடைந்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் உடனடியாக தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகரித்து காணப்படும் வெப்பத்தை சமீபத்திய உலகளாவிய மாற்றங்களுடன் ஒப்பிட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

1850ஆம் ஆண்டு முதல் இதுவரையிலான காலகட்டத்தில் உலகின் வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக 2011 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 0.2C வெப்பநிலை அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது கார்பன் உமிழ்வு அதிகரிப்பதன் விளைவாகும். 2015 – 2019க்கு இடைப்பட்ட காலத்தில் வெளியிடப்பட்ட கார்பனின் அளவு முந்தைய ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 20% அதிகரித்துள்ளது.

கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதே இதில் மிகவும் வருந்தத்தக்க விடயம்.

1993ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 3.2மிமீ அளவு உயர்ந்து வந்த கடல் நீர்மட்டம், 2014 முதல் 2019 வரையிலான காலக்கட்டத்தில் ஆண்டுக்கு 5மிமீ என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. 2007 – 2016க்கு இடைப்பட்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 4 மிமீ உயரம் கடல் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.