பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி தலா 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் 2-0 என்ற புள்ளி கணக்கில் வென்றது.

அதைத்தொடர்ந்து கடந்த 5ம் தேதி நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதைதொடர்ந்து நேற்று 2-வது டி20 போட்டி லாகூரில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பனுகா ராஜபக்சா அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார்.

பின்னர் 183 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இந்த ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அதில் பக்தர் சமான் 6(4) ரன்னும், பாபர் அசாம் 3(10) ரன்னும் எடுத்து வெளியேறினர். அடுத்ததாக களமிறங்கிய அகமது ஷஸாத் 13(16), உமர் அக்மல் 0(1), அதிரடி காட்டிய சர்பராஸ் அகமது 26 (16) ரன்களு எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக ஆசிப் அலி மற்றும் இமாத் வாசிம் ஆகியோர் இணைந்து 6-வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்த நிலையில், இமாத் வாசிம் 47 (29) ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

முடிவில் பாகிஸ்தான் அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணியின் சார்பில், நுவான் பிரதீப் 4 விக்கெட்டுகளும், வானிந்து ஹஸரங்கா 3 விக்கெட்டுகளையும், இசுரு உடானா 2 விக்கெட்டுகளையும், கசுன் ரஜிதா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளில் வென்றதன் மூலம், இலங்கை அணி தொடரை 2-0 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது.

இரு அணிகளுக்கிடையிலான கடைசி மற்றும் 3-வது டி20 போட்டி வரும் 9ந் தேதி நடைபெற உள்ளது.