நான் தலைவரானால் நன்றாக இருக்கும் என்று ரஜினி கூறியதாக பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி மீண்டும் போட்டியிடுகிறது. பாண்டவர் அணியை எதிர்த்து இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி போட்டியிடுகிறது.

சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாக்யராஜ் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசரும் இன்று தான் வேட்புமனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்புமனுவை தாக்கல் செய்த பிறகு பாக்யராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர், நான் தலைவரானால் நன்றாக இருக்கும் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார் என்று கூறினார். தேர்தல், தலைவர் இது போன்ற விஷயங்களில் தலையிடாமல் இருக்கும் ரஜினியே பாக்யராஜ் தலைவராக வேண்டும் என்று விரும்புகிறாரா என பிரபலங்களும், ரசிகர்களும் வியந்து போயுள்ளனர். ரஜினி ஆசைப்படுவதால் அவரின் ஆதரவாளர்களின் ஓட்டு பாக்யராஜுக்கே என்று கருதப்படுகிறது. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மட்டும் அல்லாமல் நடிகர் சங்கத்திலும் ஏகப்பட்ட பேர் விஷால் மீது அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் ரஜினி இப்படி ஒரு வார்த்தை சொல்லியுள்ளது சுவாமி சங்கரதாஸ் அணிக்கு கூடுதல் பலம் ஆகும்.