பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் விராட் கோலி பற்றி புகழ்ந்து தள்ளி இருக்கிறார். பாகிஸ்தான் அணி தற்போது ஆஸ்திரேலிய அணியை எதிர் கொண்டு டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. அது தொடர்பான பேட்டி ஒன்றில், மிக்கி ஆர்தர் கோலியை பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில் பாகிஸ்தான் வீரர்களுக்கு கோலியை ஒரு முன்மாதிரியாக வைத்து பயிற்சி அளிக்கிறேன் எனவும் கூறியுள்ளார். பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பை தொடரில் ஆடும் வரை தன்னம்பிக்கையுடன் இருந்தது. ஆசிய கோப்பையில், இந்திய அணியிடம் இரண்டு மோசமான தோல்விகள், வங்கதேசத்திடம் முக்கிய போட்டியில் தோல்வி என தொடர் முடிவில் பல கேள்விகளுடனும், விமர்சனங்களுடனும் சென்றது.

தற்போது ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. ஆசிய கோப்பை தோல்விகளில் இருந்து உடனடியாக மீள பாகிஸ்தான் அணிக்கு அதிரடி வெற்றிகள் தேவை. இந்த நிலையில், பயிற்சியாளர் ஆர்தர் பாகிஸ்தான் அணிக்கு கோலியை காட்டி பயிற்சி அளிப்பதாக கூறி இருக்கிறார்.

“விராட், தான் சிறந்த வீரராக இருக்க வேண்டும் என்ற பசியில் இருக்கிறார். அது அவரை மற்ற வீரர்களிடம் இருந்து பிரித்து காட்டுகிறது. அவர் வாழும் விதம், பயிற்சி செய்யும் விதம், விளையாடும் விதம் எல்லாமே ரசிக்கும் படி உள்ளது. நான் விராட் கோலியை என் பயிற்சியில் ஒரு முன்மாதிரியாக காட்டி பயிற்சி அளிக்கிறேன்” என கூறியுள்ளார்.