ஆஸஸ் (Asos.com) என்ற நிறுவனத்தின் தலைவரான பிரபல டென்மார்க் கோடீஸ்வரர் அன்டெர்ஸ் ஹோல்ச் போவ்ல்செனின் மூன்று பிள்ளைகள் இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளனர்.

இணைய வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கும் ஹோல்ச் போவ்ல்செனுக்கு நான்கு குழந்தைகள். இந்நிலையில், இலங்கையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் அவரது மூன்று பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர்.

தமது பிள்ளைகளில் உடல்களை ஏற்க இவர்கள் இலங்கை வருவார்களா என்ற தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

46 வயதான ஹோல்ச் போவ்ல்சென் ஸ்கொட்லாந்தின் முக்கிய நிலப்பகுதிகளுக்கு சொந்தக்காரர் ஆவார். அவரும் அவரது மனைவியும் சுமார் 200,000 ஏக்கர் மலைப்பாங்கான பிரதேசத்திற்கு உரிமையாளர்கள் ஆவர். எதிர்கால சந்ததிக்காக இவர்கள் இந்த நிலத்தை வளமானதாக்க முயற்சிகளை மேற்கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்களில் 290 பேர் உயிரிழந்ததோடு, சுமார் 500 பேர் வரை காயமடைந்தார்கள். சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை உரிமைகோரவில்லை.

உயிரிழந்தவர்களில் 8 பேர் பிரித்தானிய பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது.