உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அரை இறுதியில் மிகவும் வலுவான பெல்ஜியத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று மூன்றாவது முறையாக பைனல் நுழைந்தது பிரான்ஸ். 12 ஆண்டுகளுக்குப் பிறகு பைனலில் பிரான்ஸ் விளையாட உள்ளது.

1982 மற்றும் 2006க்குப் பிறகு ஐரோப்பாவைச் சேர்ந்த நான்கு அணிகள் அரை இறுதியில் விளையாடுகின்றன. தொடர்ந்து நான்காவது முறையாக ஐரோப்பிய நாடே கோப்பையை வெல்ல உள்ளது. 2006ல் இத்தாலி, 2010ல் ஸ்பெயின், 2014ல் ஜெர்மனி கோப்பையை வென்றன.

இன்று நடந்த அரை இறுதியில் பெல்ஜியம் அணியின் ஆதிக்கமே இருந்தது. பெரும்பாலான நேரம் பந்து அந்த அணியிடமே இருந்தது. முதலில் இரு அணிகளும் நிதானமாக, எதிரணிக்கு வாய்ப்பு அளிக்காமல் விளையாடின. இரு அணிகளும் கோல் அடிக்காமல் முதல் பாதி 0-0 என முடிந்தது. ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் கிரீஸ்மான் கடத்தி கொண்டு வந்து கொடுத்த பந்தை கோலாக்கினார் உம்டிடி. இதன் மூலம் 1-0 என பிரான்ஸ் வென்று, 12 ஆண்டுகளுக்குப் பிறகு பைனல் நுழைந்துள்ளது. 2006ல் இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தது பிரான்ஸ்.