இனம், சமயம், அரசியல் ரீதியாக பிரிந்திருக்காது பயங்கரவாதம் என்ற பொது எதிரியை ஒழிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைவோம் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

அரசியல் ரீதியாக ஒருவரை ஒருவர் விமர்சித்தும் இனவாதத்தை தூண்டியும் பிரிந்து செயற்படும்போது பயங்கரவாதிகளே அதனூடாக பலமடைவர் என்பதை மறந்து விடக்கூடாது என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கண்டி மாவட்டத்தின் அரசியல் தலைமைகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு துறை பிரதானிகளுடன் இன்று பிற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

இலங்கைக்கு மட்டுமன்றி முழு உலகிற்கும் சவாலாக அமைந்துள்ள பயங்கரவாதம் எனும் பொது எதிரியை ஒழிப்பதில் நாடு என்ற வகையில் நல்லிணக்கம் மிக முக்கியமானதாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவ்வாறில்லாது இனம், சமயம் என்ற ரீதியில் பிரிந்து ஒருவரை ஒருவர் குரோதத்துடன் பார்க்க ஆரம்பித்தால் அதனால் வெற்றிபெறுவது எதிரியே என்றும் நாட்டின் தற்போதைய சிறுவர் தலைமுறைக்கும் எதிர்கால தலைமுறைக்கும் இந்த எவரும் இடமளிக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.

இதன்போது மாவட்ட குழுக்கள் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கள் குறித்த பாதுகாப்பு துறை பிரதிநிதிகளுடன் இணைந்து உரிய முறையில் தமது பிரதேச பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டங்களை குறித்து தொடர்ச்சியாக மீளாய்வு செய்தல், போலிப் பிரசாரங்கள் மற்றும் அச்சமூட்டுதல் குறித்து மக்களுக்கு தெளிவூட்டி மக்களின் அன்றாட நடவடிக்கைகளை இயல்பு நிலையில் பேணுவதற்கு அரசாங்க அதிகாரிகள் தலையிட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக் காட்டினார்.