பிரெக்ஸிட் தொடர்பான இரண்டாவது திட்ட வரைவு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையிலும், நல்லதொரு பிரெக்ஸிட் ஒப்பந்தம் உருவாக்குவறத்கான பணிகளை தொடர்வேன் என்று பிரிட்டன் பிரதமர் தெரீசா மே கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த அவர், தனது ஒப்பந்த வரைவு பிரிட்டிஷ் மக்கள் விரும்புகிற பிரெக்ஸிட் மாதிரியாக வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

கடினமான தெரிவுகளை எதிர்கொள்ளும் நாடாளுமன்றம், அடுத்த நடவடிக்கை பற்றி முடிவெடுக்க வேண்டும் என்ற தெரீசா மே தெரிவித்துள்ளார்.

மார்ச் 29ம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து எவ்வித ஒப்பந்தமும் இல்லாமல் வெளியேறுவதை தடை செய்வது தொடர்பாக முடிவு செய்ய இன்று புதன்கிழமை மாலை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர்.

பிரிட்டன் பிரதமர் தெரீசா மேயின் இரண்டாவது பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தம் நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட பின்னர் இந்த வாக்கெடுப்பு வருகிறது.

இவ்வேளையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அல்லாதவைகளிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியை குறைப்பதையும், ஒப்பந்தம் எதுவும் உருவாக்கப்படாவிட்டால், வட அயர்லாந்தோடு கடுமையான எல்லை வரையறையை தவிர்க்க நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதையும் பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.

பிரிட்டன் பிரதமரின் இரண்டாவது வரைவு திட்டம் நிராகரிக்கப்பட்ட பின்னர், ஒப்பந்தம் எதுவும் இல்லாமல் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது இதுவரை நிகழ்ந்ததைவிட அதிக முக்கியத்துவம் பெறுகிறது என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிக்கிறது.

பிரிட்டன் பிரதமர் தெரீசா மேயின் இரண்டாவது வரைவு ஒப்பந்தத்தை 391 வாக்குகள் எதிராகவும், 242 வாக்குகள் ஆதரவாகவும் வாக்களித்து நிரகரித்திருப்பது தொடர்பாக பல ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர்.