குடும்ப விஸ்வாசம், தேசிய நலன் ஆகிய இரண்டுக்கும் இடையில் இழுபடுவதாக கூறி தமது அமைச்சர் பதவியையும், எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்துள்ளார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் தம்பி ஜோ ஜான்சன்.

வணிகத் துறை அமைச்சரும், கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி.யுமான ஜோ தமது பணியில் தீர்க்க முடியாத நெருக்கடி இருந்துவந்ததாக குறிப்பிட்டார்.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்கவேண்டுமா, விட்டு விலகவேண்டுமா என்பதற்காக 2016ல் நடத்தப்பட்ட பிரெக்ஸிட் பொது வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிக்கவேண்டும் என்று வாக்களித்தார் ஜோ. அதே நேரம், அவரது சகோதரர் விலகவேண்டும் என்பதற்கு ஆதரவாகப் பிரசாரத்தை முன்னின்று நடத்தினார்.

பிரதமர் தெரீசா மே தயாரித்த வரைவு பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் முன்பே இவர் தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இவரது அண்ணன் போரிஸ் ஜான்சனை கன்சர்வேட்டிவ் கட்சி பிரதமராக்கிய பிறகு இவர் மீண்டும் அமைச்சரானார்.

தற்போது ஜோவின் பதவி விலகல் குறித்து கருத்துத் தெரிவித்த பிரதமர் இல்ல செய்தித் தொடர்பாளர் ஒருவர், “ஜோ ஜான்சனின் சேவைக்கு பிரதமர் நன்றி தெரிவிக்க விரும்புகிறார். அவர் அறிவில் சிறந்த அமைச்சராகவும், அற்புதமான எம்.பி.யாகவும் இருந்துள்ளார். இந்த விவகாரம் ஜோவுக்கு எளிமையான ஒன்றாக இருந்திருக்காது என்பதை ஓர் அரசியல்வாதியாகவும், சகோதரராகவும் பிரதமர் புரிந்துகொள்கிறார். அவரைத் தேர்ந்தெடுத்த ஆர்பிங்டன் மக்களுக்கு அவரைவிட சிறந்த பிரதிநிதி இருக்கமுடியாது” என்று தெரிவித்தார்.