வலுவான நிலையில் காணப்பட்ட பிரித்தானிய பவுண்டின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் தெரேசா மே-யின் பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) மூன்றாவது முறையாகவும் தோல்வியடைந்தது. இந்நிலையில் இந்த நாணய பெறுமதி வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

டொலர் மற்றும் யூரோவுடன் ஒப்பிடுகையில் ஸ்ரெர்லிங் பவுண்ட் மிகவும் வலுவான நிலையில் காணப்பட்டது. ஆனால், தற்போது அதன் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 286 உறுப்பினர்களும் எதிராக 344 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

இதையடுத்து 58 வாக்குகள் வித்தியாசத்தில் தெரேசா மே-யின் ஒப்பந்தம் மூன்றாவது தடவையாகவும் நிராகரிக்கப்பட்டது.

இந்த தொடர் நிராகரிப்பானது பிரித்தானிய அரசியல் துறையின் தோல்வியையே வெளிப்படுத்துவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.