சீனா பீஜிங் நகருக்குச் சென்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பற்றி தவறான செய்தி வெளியிட்டதற்காக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சியின் தலைவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அரசு சுமார் 6 பில்லியன் டாலர் அளவுக்கு கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இச்சூழலில் பாகிஸ்தானுக்கு நிதி உதவி கோரி அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் சீனாவுக்கும் சவுதி அரேபியாவுக்கு பயணித்தார். அந்நாட்டுத் தலைவரகளைச் சந்தித்து இதுகுறித்து பேசியுள்ளார்.

இந்நிலையில் இம்ரானின் சீனா பயணத்தில் பீஜிங் நகருக்கு அவர் சென்றது குறித்து செய்தி வெளியிட்ட அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சியில் ஒரு வார்த்தை தவறுதலாகிவிட்டது. ஆங்கிலத்தில் Beijing (பீஜிங்) என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக Begging (பிச்சை எடுத்தல்) என்று குறிப்பிட்டு அது தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிவிட்டது.

சுமார் 20-25 விநாடிகள் மட்டுமே இந்தத் தவறான வார்த்தை திரையில் தோன்றியிருக்கிறது தவறை கவனித்தவுடன் திருத்தப்பட்டிருக்கிறது. இருப்பினும் இந்தத் தவறால் அவமதிப்பை இழைத்துவிட்டதாகக் கூறி அந்நாட்டு தொலைத்தொடர்பு அமைச்சகம், அரசுத் தொலைக்காட்சியின் தலைவரான ஹசன் இமாத் முகமதியை பணிநீக்கம் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

முந்தைய ஆட்சி அதிகாரத்தில் இருந்த பாகிஸ்தான் அரசியல் கட்சித் தலைவர்கள் பல நாடுகளுக்குச் செல்லும்போது, இம்ரான் கான் அவர்கள் ஒவ்வொரு நாடாகச் பிச்சைப் பாத்திரத்துடன் அலைவதாக விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது.