அரசு பொதுத்தேர்வில் மாணவிகள் முதலிடம்!
ஆசிட் வீச்சில் மாணவிகள் மரணம்!
பல கலைநிகழ்ச்சிகளில் மாணவிகள் முதலிடம்!
ஒருதலைக்காதலால் மாணவிக்கு அரிவாள் வெட்டு!
“மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா”-இது உண்மைதானா?
மாதவம் செய்து மங்கையராய்ப் பிறந்தால் சேதாரமாக்கிச் சிதையில் சேர்க்கிறார்கள்!
உரிமைகளுக்காகப் போராடினால் சிறையிலும் சேர்க்கிறார்கள்! நேர்கொண்ட பார்வைகள் குருடாகிப் போகின்றன,
வரதட்சணை கொடுமை என்னும் கூர்வாள்களால்!
நிமிர்ந்த நன்னடைகள் முடங்கிப் போகின்றன,
மதங்களெனும் பிரிவினை ஆயுதங்களால் !
“பெண் விடுதலை பெற்றுள்ளோம்”- இது பொய்!
நீதி கேட்டு வழக்கில் உள்ளன விடுதலை வேண்டிய திருமணங்கள்! மணமாகும்வரை பெற்றோர் சொல் கேட்டு,
கல்யாணம் ஆனபின் கணவனுக்கு கட்டுப்பட்டு,
மரணம் வரை பெற்றமகனை எதிர்பார்த்து,
மீறினால் பெண்களுக்கு வதைகளும்,
மாறினால் அவர்களைப்பற்றிய கட்டுக்கதைகளும்!
கூட்ட நெரிசல்களில்,ஓடும் பேருந்துகளில்,
உடைகள் சரிபார்க்கும் கடைகளின் அறைகளில்,
ஒரு சில ஆசிரியர்களின் ஆசைகளில்,
அலுவலக மேலாளர்களின் கழுகுப் பார்வையில்,
இன்னும் பலவற்றில் சிக்கித்தான் வீடுதிரும்புகின்றனர்!
சமூக வசைபாடல்களுக்கு பயந்து தூக்கிட்டு மடிந்துதோரும் உள்ளனரே!
வாழ்க்கைப் படகை சமுத்திரத்தில் செலுத்துங்கள்!
வீழ்ந்தால் முத்தெடுப்பீர்!
வாழ்ந்தால் கரைசேர்வீர்!
நீங்கள் “புதுமைப்பெண்கள்!”