முதலில் பெருமூச்சு ஒன்றை விட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், “இப்போ வருமோ? அப்போ வருமோ?” என்று பல ஆண்டுகளாக நம்மை அலைக்கழித்து வந்த டார்க் மோட் அம்சமானது, ஒருவழியாக பேஸ்புக் ஆண்ட்ராய்டு ஆப்பில் அறிமுகமாகவுள்ளது.

இந்த தகவலானது மிகவும் நம்பகமான லீக்ஸ்டர் ஆன Jane Manchun Wong மூலம் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இது பேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கப்பெற்ற அதிகாரபூர்வமான தகவல் அல்ல என்று அர்த்தம்.

ஆண்ட்ராய்டுக்கான பேஸ்புக் மொபைல் ஆப்பில், இந்நாள் வரை வெளியிடப்படாத டார்க் மோட் விருப்பத்தை ஜேன் மஞ்சுன் வோங் கண்டுள்ளார். இதன் வழியாக, பேஸ்புக் தனது மொபைல் ஆப்பில் – நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட – டார்க் மோடை செயல்படுத்த தொடங்கியுள்ளது என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.

“பேஸ்புக்கின் இந்த டார்க் மோட் அம்சமானது அதன் ஆரம்ப கட்ட வளர்ச்சியில் இருப்பதாக தெரிகிறது, அதை புரிந்து கொள்ளவும் முடிகிறது. இப்போதைக்கு, ஆப்பின் சில பகுதிகள் மட்டுமே இருண்ட பயன்முறையை ஆதரிப்பதற்கான வேலைகள் செய்யப்பட்டுள்ளன.” என்று கூறியுள்ளார் ஜேன் மஞ்சுன் வோங்.

மேலும் “இது போன்ற சோதனை அம்சங்களை உருவாக்குவதற்கும் மற்றும் வெளியிடுவதற்கும் எடுக்கும் நேரமானது மாறுபடும். எனவே பேஸ்புக் மொபைல் ஆப்பின் டார்க் மோட் அம்சத்தின் வெளியீட்டை பற்றிய விவரங்களை அறிய நான் ஆர்வமாக உள்ளேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

பேஸ்புக் மட்டுமன்றி டிவிட்டர் தொடங்கி ஸ்லாக் வரையிலாக, அனைத்து தளங்களும் டார்க் மோட் அம்சத்தினை அறிமுகப்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

டிவீட்டரை பொறுத்தவரை, ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் இருக்கும் டார்க் மோட் விருப்பத்தின் கீழ் – லைட்ஸ் அவுட் மற்றும் ஆட்டோமேட்டிக் டார்க் என்கிற இரண்டு புதிய முறைகளை சேர்த்துள்ளது. இந்த இரண்டு புதிய முறைகளுமே iOS பயனர்களுக்கு கிடைக்கின்றன, இருப்பினும் இந்த அம்சம் எப்போது ஆண்ட்ராய்டு பயனர்களை எட்டும் என்பது தெளிவாக தெரியவில்லை.