பேஸ்புக் தரவுகள் குறித்து விசாரணை

10978

கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் மூடப்பட்டாலும், பேஸ்புக் தரவுகள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டது குறித்த விசாரணை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல்களை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட, கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்னும் அரசியல் ஆலோசனை நிறுவனம் வணிக இழப்பு காரணமாக மூடப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அரசியல் கட்சிகள் சார்பில், இந்நிறுவனம் முறைகேடாக பயன்பாட்டாளர்களின் தகவல்களை பெற்றதாகக் கூறப்பட்டது.

குறித்த நிறுவனம் 87 மில்லியன் பயன்பாட்டாளர்களின் தகவல்களை பல்வேறு செயலிகளின் மூலம் தவறாக பயன்படுத்தியது என அண்மையில் பேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டது.

இது குறித்த விசாரணை தொடர்ந்தும் நடைபெறும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ‘பயன்பாட்டாளர்களின் தகவல்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது குறித்து புரிந்துகொள்வதில் உறுதியாக உள்ளோம், எனவும் இது மீண்டும் நடக்காமல் இருக்கும் என்பதை உறுதிப்படுத்துவோம்’ என்றும் அதன் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.