புதிய கழிப்பறை தொழில்நுட்பம் பற்றிய கண்காட்சியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கையில் மனிதக் கழிவுகளை ஏந்தி உரையாற்றியுள்ளார்.

உலகின் இரண்டாவது பெரிய பணக்காரராகத் திகழ்பவர் பில் கேட்ஸ். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவரான இவருக்கு 96 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.

இவர் சீனாவின் பீஜிங் நகரில் நடைபெறும் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்ட கழிப்பறைகளின் கணகாட்சி (Reinvented Toilet Expo) தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டார். மூன்று நாட்கள் நடக்கும் இந்நிகழ்வின் தொடக்க விழாவில் உரையாற்றிய பில் கேட்ஸ் எதிர்காலத்திற்கான கழிப்பறை தொழில்நுட்பம் பற்றிப் பேசினார்.

“ஒரு பத்தாண்டுக்கு முன்பு வரை எனக்கு இந்த மனிதக் கழிவைப் பற்றி அதிகமாக எதுவும் தெரியாது” என்ற அவர் இது பற்றி தன் மனைவி மெலிண்டாவிடம் பேசும்போது, உணவு மேஜைக்கு இந்த விஷயத்தை எடுத்து வர வேண்டாம் என்பார் என்று கூறினார்.தொடர்ந்து, மூடியிட்ட ஒரு பாட்டிலில் மனிதக் கழிவை எடுத்து அனைவர் முன்பும் வைத்த பில் கேட்ஸ், “இந்த அளவு மனிதக் கழிவில் 200 ட்ரில்லியன் ரோட்டா வைரஸ்களும் 20 பில்லியன் ஷிகெல்லா பாக்டீரியாக்களும் ஒரு லட்சம் ஒட்டுண்ணிப் புழுக்களின் முட்டைகளும் இருக்கும்” என்றார்.

தூய்மையான கழிப்பறை வசதி இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 5 லட்சம் குழந்தைகள் நோய்வாய்ப்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார். புதியமுறையில் கழிப்பறை தொழில்நுட்பத்தில் மறுகண்டுபிடிப்பு நிகழ்த்த முடியுமா என்ற கேள்விக்கு எப்போது நேரமில்லை. அதே சமயத்தில் அந்த மாற்றம் எவ்வளவு விரைவில் நடக்கிறது என்பது முக்கியமானது என்றும் பில் கேட்ஸ் தெரிவித்தார்.

2030ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் கழிப்பறை தொழில்நுட்பத்தில் சாதிக்கும் நோக்கில் சீனாவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. க்ளியர் (Clear), எக்கோசான் (Ecosan) , சி.ஆர்.ஆர்.சி. (CRRC) ஆகிய அந்த நிறுவனங்கள் ஆண்டுக்கு 6 பில்லியன் டாலர் இதற்காக முதலீடு செய்கின்றன என்பதை பில் கேட்ஸ் பாராட்டினார்.

சீனாவின் இந்த ‘கழிப்பறைப் புரட்சி’ (Toilet Revolution) கடந்த 200 ஆண்டுகளில் மிகப்பெரிய தூய்மைத் திட்டம் என்றும் பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கண்காட்சியில் மனிதக் கழிவைச் சுத்திகரித்து மின்சாரம் மற்றும் குடிநீர் தயாரிக்கும் நவீனத் தொழில்நுட்பம் உட்பட பல புதிய சுகாதாரக் கழிப்பறை சார்ந்த மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.