-மன்னார் நகர் நிருபர்-

(31-10-2019)

எதிர் வரும் 16 ஆம் திகதி நடை பெறவுள்ள 8 ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு  வியாழக்கிழமை (31) மன்னார் மாவட்டத்தில் ஆரம்பமாகியது.

நாடளாவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை (31) காலை 8.30 மணிக்கு தபால் மூல மூல வாக்களிப்பு ஆரம்பமாகிய நிலையில் மன்னார் மாவட்டத்திலும் தபால் மூல வாக்களிப்பு இடம் பெற்றது.

அதனடிப்படையில் மாவட்ட செயலக ஊழியர்கள் , தேர்தல் திணைக்களத்தின் ஊழியர்கள் ,பொலிஸார் தவிர்ந்த ஏனைய அரசு அலுவலர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று வியாழன் மற்றும் நாளை வெள்ளி ஆகிய தினங்களில் இடம் பெறுகின்றது.

இன்றைய தினம் வியாழக்கிழமை மன்னார் மாவட்டத்தில் பிரதேசச் செயலகங்கள்,வலய கல்வி திணைக்களங்களில் இடம் பெற்று வருகின்ற தபால் மூல வாக்களிப்பில் அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

தபால் மூல வாக்களிப்புக்காக மன்னார் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 9 பேர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.