-மன்னார் நிருபர்

(13-02-2019)

மன்னார்- பள்ளிமுனை பகுதியில் வீதியில் உள்ள குழிகளை திருத்தி அமைக்கும் பணிக்கு வருகை தந்த அரச ஊழியர்களுக்கும் பள்ளிமுனை கிராம மக்களுக்கும் இடையில் இன்று (13) புதன் கிழமை காலை முறுகள் நிலை ஏற்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான பெருக்க மரம் அமைந்துள்ள சுற்றுலா கிராமமான பள்ளிமுனை கிராமம் காணப்படுகின்றது.
குறித்த கிராமத்திற்கான பிரதான வீதி சீரான முறையில் அமைக்கப்படவில்லை எனவும் வீதி அமைக்கப்பட்டு பல வருடங்கள் ஆகியும் இன்னும் இவ் வீதி புணரமைக்கப்படவில்லை எனவும் இது தொடர்பாக பல முறை உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தும் ஒழுங்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளாது வெறுமனே கண் துடைப்புக்கு என பல முறை வீதிகளை தற்காலிகமாக நிறப்பி விட்டு மட்டும் செல்கிறார்கள்.

எனவே குறித்த வீதியை முழுமையாக புணரமைக்கும் வரை வீதியை தற்காலிகமாக புணரமைக்க அனுமதிக்கப் போவதில்லை என மக்கள் தெரிவித்து இன்று புதன் கிழமை (13) காலை 11 மணியளவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு அனுமதி அளிக்க முடியாது. எனவே நிரந்தர வீதியை அமைக்கும் வரை நாங்கள் இவ்வாறன செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கமுடியது. என எதிர்ப்பை தெரிவித்ததை அடுத்து குறித்த பகுதிக்கு வருகை தந்த அதிகாரி குறித்த பிரச்சினை தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக கூறி சம்பவ இடத்தை விட்டு சென்றுள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பிரதேச செயலாளர் மற்றும் பங்குதந்தை மக்களிடம் உரையாடியதை தொடர்ந்து மக்கள் குறித்த தற்காலிக பணிகளை செய்வதற்கு அனுமதி அழித்துள்ளனர்.

எதிர் வரும் 15 ஆம் திகதி குறிப்பிட்ட கிராமத்தில் வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு பிரதமர் ரணில் விக்கிரம சிங்க வருகை தர உள்ள நிலையில் குறித்த பாதைகளில் உள்ள குழிகளை மூடி பாதையை அழகு படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.