‘‘இதுக்காகப் போனவருசம் இந்தியாவுக்குப் போனாங்கள். மனிசியை விட்டிட்டு நான் மட்டும் இடை யில திரும்பி வந்தனான். காசு காணாம வந்திற்று. இஞ்சை வந்து பெரிய லோன் ஒண்டப்போட்டு எடுத்துக் கொண்டுபோய்த்தான் எல்லாத்தையும் முடிச்சுக்கொண்டு திரும்பினாங்கள். இப்பவும் லோனைக் கட்டிக்கொண்டு இருக்கிறன். இதுக்காகக் காணித் துண்டு ஒண்டையும் விக்க வேண்டியதாப்போச்சுது. எப்பிடியோ ஒருமாதிரிக் காசைத் திரட்டி எல்லாத்தையும் முடிச்சுக் கொண்டு வந்திற்றம். இப்ப பிள்ளைக்கு எட்டு மாசம். கூடுதலா எல்லாருக்கும் ரெட்டைப் பிள்ளைகள் தான் கிடைச்சிருக்கு. எனக்கு ஒரு பொம்பிளைப் பிள்ளை… தவழத் தொடங்கீற்றா… ஆள் சரியான துடினம்… ஒரே சிரிப்பும்… சத்தமும்தான்…’’ பணத்தை இறைத்த மனநிலை மாறி மனதில் ஒரு வித பூரிப்புத் தொற்றிக் கொள்கிறது. தன்னுடைய குழந்தையின் லீலைகளைத் தொடர்ந்தும் கூறத் தொடங்குகிறார் சாந்தன்.

அவர் இப்படித்தான் அப்பாவாகி இருக்கிறார். ‘ரெஸ்ற் ரியூப் பேபி’ என்கிற ஆய்வுகூடப் பரிசோதனைக் குழாய்க் கருத்தரிப்பு முறையால் இது சாத்தியமாகி இருக்கிறது.

சாந்­தன் மரு­த­னார் மடத்­தைச் சேர்ந்­த­வர். வயது நாற்­பத்­தைந்து மாதிரி இருக்­கும்! மனை­விக்­கும் அதே வய­து­தான். முப்­பத்­தைந்­து­க­ளில் திரு­ம­ணம் செய்­தி­ருக்­கி­றார்­கள். எட்­டு­வ­ரு­டங்­க­ளா­கப் பிள்­ளைப்­பாக்­கி­யம் இல்லை. சமூ­கத்­தில் பல அவஸ்­தை­களை எதிர்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். ‘மலடு’ எனும் வார்த்­தை­யி­லி­ருக்­கின்ற அரு­வ­ருப்­புக்­கள் இவர்­களை எப்­படி எல்­லாம் அரித்தெடுத்­தி­ருக்­கும் என்­பதை உங்­க­ளுக்­குச் சொல்­லித்­தான் தெரி­ய­வேண்­டி­யி­ருக்­கும்! அது அவர்­க­ளுக்கு மாத்­தி­ர­மே­யான வலி! இப்­போது அவர் விடு­கின்ற நிம்­ம­திப்­ பெ­ரு­மூச்­சில் அதி­லி­ருந்து விடு­பட்­டி­ருப்­பதே தெரி­கி­றது. கூடவே பட்ட கட­னைக் கட்­டி­மு­டிக்­க­வேண்­டிய கடப்­பா­டும் தெரி­கி­றது.

‘‘பிள்ளை இல்லை. பல வரு­சமா வைத்­தி­யம் பார்த்­துக்­கொண்டு வந்­த­னாங்­கள். யாழ்ப்­பா­ணத்­திலை இருக்­கிற தமிழ் வைத்­தி­யர்­க­ளிட்­டத்­தான் பிரச்சி­னை­யைச் சொல்­லிக் காட்­டத் தொடங்­கி­னம். அம்­ப­தா­யி­ரம் அறு­பதா­யி­ரம் வரைக்­கும் செல­வ­ழிஞ்­சி­ருக்­கும்…! காலம்தான் இழு­பட்­டுக் கொண்டு போச்­சுது! சரி­வாற மாதி­ரித் தெரி­யேல்லை. ஆங்­கில மருத்­து­வர்­க­ளிட்­டைக் காட்­டத் தொடங்­கி­னம். பிறை­வேற்­றாத்­தான் காட்­டி­னாங்­கள். எங்­க­ளின்ர கரு முட்­டை­ய­ளில இருக்­கிற குறை­பாடு கார­ண­மாக் குழந்­தை­யைப் பெத்து எடுக்­கி­றது கஸ்­ரம் எண்டு சொல்­லிச்­சி­னம். அது­வும் நிறைய ரெஸ்ற்­ரு­கள் செய்­தாப் பிறகு தான் சொன்­னவை. அதுக்­கும் நிறை­யச் செல­வா­கிச்­சுது. பிறகு கொழும்­பிலை ஒரு டொக்­ட­ரின்ரை பெய­ரைச் சொல்­லிப் போய்க் காட்­டச் சொல்­லிச்­சி­னம். அங்கை போயும் சரி­வ­ர­யில்லை. ஆனா ஆறேழு இலட்சம் செல­வ­ழிஞ்சு போட்­டுது. அதுக்­குப் பிற­கு­தான் இந்­தி­யா­வுக்கு வெளிக்­கிட்­டது. அங்­கை­போய்த்­தான் சரி­வந்­துது. அதுக்கு 25க்குக் (ரூபா 25 லட்சம்) கிட்­டச் செல­வ­ழிஞ்­சுது. கட­வுளே எண்டு ஒரு தட­வை­யி­லேயே சரி வந்­த­தா­லை­தான் இவ்­வ­ளவு காசோட முடிஞ்சுது. அநே­க­மான ஆக்­க­ளுக்கு இப்­பி­டி­யில்ல. திரும்­பத் திரும்­பச் செய்­ய­வேண்டி வந்தா இன்­னும் செல­வா­கும். சில­ருக்கு நிறை­யத் தட­வை­கள் செய்து சரி­வ­ரா­ம­லும் போயி­ருக்கு’’ தான் அதிர்ஷ்­ட­சாலி என்­கி­றார் சாந்­தன்.

இலட்­சக்­க­ணக்­கில் பணம் இறைத்­தும் இன்­ன­மும் குழந்தை கிடைக்­கா­த­வர்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் அவர் அதிர்ஷ்­ட­சா­லி­தான். அந்த நிம்­ம­தி­ யு­டன்­தான், தான் பட்ட கடனை இப்­போ­து­வரை அவர் கட்­டிக்­கொண்­டி­ருக்­கி­றார்.

‘‘அங்க நிண்டு செய்­யி­ற­தெண்டா… இரு­வத்­தி­ரெண்­டி­லை­யி­ருந்து இரு­வத்­தைஞ்சு வரைக்­கும் கையில வைச்­சி­ருக்­க­ வே­ணும். எல்­லாம் ஒரு தரத்­தில சரி­வந்­தாத்­தான். இல்­லாட்­டிக்கு இன்­னும் செல­வா­கும். அங்­க­போய் குழந்­தை­யைக் கருக்­கட்­டிக்­கொண்டு ஐஞ்சு மாசத்­திலை, ஆறு மாசத்­திலை திரும்பி வாற­தெண்­டால் இதை­வி­டக் குறைய… ஒரு பன்­ரண்டு, பதின்­மூண்டு மாதிரி முடி­யும். நாங்­கள் டெலி­வறி வரைக்­கும் நிண்­ட­னாங்­கள். அது­தான் இவ்­வ­ளவு செலவு. அங்க டெலி­ வ­றிக்­குப் பிறகு நிற்­கி­ற­வை­ய­ளும் இருக்­கி­னம். இவ்­வ­ளவு கஸ்­ரப்­பட்டு, இவ்­வ­ளவு காசு செல­வ­ழிச்­சுக் குழந்தை கிடைச்­சது… காசு­போ­னா­லும் பரவா­யில்லை எண்டு சொல்­லிக் குழந்தை ஓர­ள­வுக்கு வள­ருற வரைக்­கும்… ஐஞ்­சாறு மாசம் வரைக்­கும் தங்கி வாற­வை­யும் இருக்­கி­னம்’’ என்­கி­றார் சாந்­தன்.

சாந்­தன் சொல்­வது உண்­மை­தான். இந்த மருத்­துவ வியா­பா­ரத்­தி­லும் பல ‘பக்­கேஜ்­கள்’ இருக்­கின்­றன. கருக்­கட்­டச் செய்­வது வரை­யான பரி­சோ­த­னை­க­ளுக்­கான கட்­ட­ணம், கருக்­கட்டி அதைக் கவ­னித்து ஆரோக்­கி­ய­மாக வள­ரச் செய்­வது வரை­யான கட்­ட­ணம், பிர­ச­வம் வரை­யான கட்­ட­ணம், பிர­ச­வத்­துக்­குப் பின்­னர் சில காலங்­கள் வரை பரா­ம­ரிப்­பது வரை­யான கட்­ட­ணம் என்­ற­மை­கிற அந்­தப் பக்­கேஜ்­கள் பல. சில ‘பக்­கேஜ்­க­ளில்’ இன்­னும் பல வசூ­லிப்பு மாதி­ரி­கள் இருக்­கின்­றன. அதா­வது ஆரம்ப கட்­டப் பரி­சோ­த­னை­கள் பல­வற்றை இங்கோ, அல்­லது வேறு இடங்­க­ளிலோ செய்­தி­ருந்­தா­லும் அங்கு பணம் செலுத்­தித் திரும்­ப­வும் செய்ய வேண்­டும். வேறு இடங்­க­ளில் செய்து ஒப்­ப­மி­டப்­பட்ட உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட அறிக்­கை­க­ளால் பய­னில்லை. திரும்­ப­வும் பணம். மறு­ப­டி­யும் சோதனை. இது கட்­டா­ய­மா­னது. இந்த வசூ­லிப்­புக்கு ‘நம்­ப­கத் தன்மை’ என்­றொரு முலாம் பூசப்­பட்­டி­ருப்­பது தவிர்க்க முடி­யா­த­தா­கி­றது.

‘‘கொழும்­பி­லை­யும் செய்­யி­னம். கொழும்­பிலை ஒரு ஐஞ்சு லட்சம் செல­வா­கு­தெண்டு வைச்­சால் இந்­தி­யா­விலை ஒரு ஏழரை இலட்சம் மாதி­ரிச் செல­வா­கும். சிகிச்சை சரி­வா­றது இந்­தி­யா­வைக் காட்­டி­லும் கொழும்­பிலை குறைவு எண்­டு­ற­தாலை இந்­தி­யா­வுக்கே ஒரே­ய­டி­யா­கப் போறதை ஆக்­கள் விரும்­பு­கி­னம். செலவு எண்டு அவை சொல்­லு­றது அந்­தச் சிகிச்­சைக்கு மட்­டும்­தான். இப்­பி­டிச் சொல்லி ஆரம்­பிக்­கி­றது ஒரு தட­வை­யில வெற்­றி­ய­ளிக்­காட்­டிச் செலவு கூடிக் கொண்டே போகும். அங்க போன தங்­கி­யி­ருக்­கிற செல­வு, சாப்­பாடு, போக்­கு­வ­ரத்­துச் செல­வும் மருந்­துச் செல­வு­க­ளோட சேந்து வரும். நாங்­கள் செய்­தது சேத்­துப்­பட்­டிலை இருக்­கிற ஒரு தனி­யார் ஹொஸ்­பி­ரல்லை. ஹொஸ்­பி­ரல்லை தங்­கி­யி­ருந்­தால் செலவு கூட. ஒரு நாளுக்கு நாலா­யி­ரம் ஐயா­யி­ரம் வரும் அங்­கத்­தே­யக் காசுக்கு. அங்கை ‘ஹை றேட்’. வச­தி­யான சில ஆக்­கள் அங்­கை­தான் தங்­கு­வி­னம். விச­யம் தெரி­யாத எங்­கடை ஆக்­கள் சில பேரும் கொஞ்­சக்­கா­லம் அங்கை இருந்து பிறகு வாடகை வீடெ­டுத்­துப் போயி­ருக்­கி­னம். அது­வும் ஹொஸ்­பி­ர­லுக்­குக் கிட்­ட­வா­கத்­தான் இருக்­க­வே­ணும். கொஞ்­சம் தூரவா எடுக்­கி­ற­தெண்டா ஒரு வீடையே ஐயா­யி­ரம், ஆறா­யி­ரத்­துக்கு மாத வாட­கைக்கு எடுக்­க­லாம். நாங்­கள் கிட்­ட­வா­கத்­தான் எடுத்­த­னாங்­கள். அது­வும் முழு வீடு இல்ல. அற்­றாஜ் பாத்­ரூ­மோட ஒரு றூமும், கிச்­சி­னும் மட்­டும்­தான். மாசம் பதின்னாலா­யி­ரம் வாடகை, கரண்ட் பில்­லும் நாங்­க­தான் கட்­ட­வே­ணும். சாப்­பாட்­டுச் செல­வும் மாசம் பத்­தா­யி­ரம் பதி­னை­யா­யி­ரம் போகும். எல்­லாம் அங்­கத்­தை­யப் பெறு­ம­திக்­குப் பாக்­க­வே­ணும். அதோடை ஒவ்­வொரு நாளும் ‘செக்­அப்’­பு­கள் செய்­வி­னம். ஒவ்­வொரு நாளும் கால­மை­யும் பின்­னே­ர­மும் ஒரு நேர்ஸ் வந்து ஊசி போடுவா. ஊசிக்கு நானூற்­றித் தெண்ணூறு ரூபா. நேர்ஸ் வந்­து­ போ­ற­துக்கு நூறு ரூபா. இது­வும் இந்­தி­யாக் காசுக்­குத்­தான். தூரவா இருந்தா வாடகை குறைய எண்­டா­லும் மற்ற வழி­யால நட்­டம் தான். நேர்ஸ் தூர இடத்­துக்கு ஊசி கொண்டு வாற­தெண்டா அவா­வுக்­கும் ‘றேற்’ கூட.

அங்­கை­யி­ருந்து நாங்­கள் அடிக்­கடி ஹொஸ்­பி­ர­லுக்­குப் வந்­து­போ­ற­தெண்­டால் போக்­கு­வ­ரத்­துச் செலவு, அதோடை உடம்­புக்­கும் கூடாது, நீண்ட தூரம் பய­ணம் செய்­யக்­கூ­டாது, ஏறி இறங்க ஏலாது, உடம்பு குலுங்­கக் கூடாது, கனக்­கப் பிரச்­சி­னை­யள் இருக்கு. ஏதா­வது பிச­கிப்­போச்­சுது எண்­டால் திரும்­ப­வும் கருக்­கட்­டச் செய்­யி­ற­துக்கு ஒரு மாசம் வரைக்­கும் பாத்­துக்­கொண்டு இருக்­க­வே­ணும். பிற­கென்ன வீட்டு வாடகை, கரண்ட் பில், சாப்­பாட்­டுச் செலவு எல்­லாம் வந்­தி­ரும்…’’

இந்­தியா சென்று குழந்தை பெறும் இந்­தச் சிகிச்சை முறைக்­கு­ரிய மருத்­து­வச் செலவு மட்­டு­மல்ல சாந்­தன் சொல்­வ­து­போல, இன்­னும் பல வழி­க­ளில் இவர்­க­ளுக்கு அங்கு செல­வு­கள் காத்­துக்­கொண்­டி­ருப்­பது உண்­மை­ தான். அவ்­வ­ள­வும் இந்­தி­யா­வுக்­குத்­தான். இது­போன்ற பல­தால்தான் இந்­தியா இன்­ன­மும் இதை இறு­கப் பிடித்து வைத்­தி­ருக்­கி­றது.

ஆம்! ‘‘இலங்­கைக் காசுக்கு அங்கை மாசம் எழு­வத்­தைஞ்சு, எண்­பது மாதி­ரிச் செல­வா­கும்’’ என்­கி­றார் நாம் பெயர் மாற்­றிக் குறிப்­பி­டும் சாந்­தன். அவ­ரு­டைய உண்­மைக் கதை­தான் இது.

‘‘இலங்­கைக் காசுக்­குப் பதி­னைஞ்சு லட்சம் கொண்டு வந்­தாக் காணும் எண்­டு­தான் சொன்­னவை. கடை­சியா அவை சொன்­ன­திலை டபி­ளாத்­தான் செல­வ­ழிஞ்­சது. எனக்­கும் ‘றீற்மேன்ட்’ நடந்­தது. அது முதல் ஒரு மாசத்­துக்­குள்ளை முடிஞ்­சுது. றூம் வாடகை பதின்னாலா­யி­ரம், கரண்ட் பில் எப்­பி­டி­யும் நாலா­யி­ரம்… நாலா­யி­ரத்து ஐந்­நூறு அப்­பிடி வரும், சாப்­பாட்­டுக்கு மாசம் பதி­னைஞ்சு வரை­யில வேணும். சமைக்­கி­ற­துக்­கும், பரா­ம­ரிக்­கி­ற­துக்­கும் அங்கை ஒரா­ளைப் பிடிச்­சது. குழந்தை கிடைச்­சுத் திரும்பி வாற வரைக்­கும் அந்த வேலை­யா­ளுக்­கும் சம்­ப­ளம்­ தான். அவா­வுக்கு… இந்­தி­யக் காசுக்கு எண்­ணா­யி­ரம் எண்­ணா­யி­ரத்தி ஐந்­நூறு மாதி­ரிக் குடுத்­தது. ரெண்டு, மூண்டு மாசம் போகக் கொண்­டு­போன காசு முடிஞ்சு போச்சு. நான் திரும்பி இஞ்சை வந்து ‘லோன்’ ஒண்டு போட்டு எடுத்­துக் கொண்டு போனனான். இது­களை எல்­லாம்­விட ஹொஸ்­பி­ரல் செல­வும் இருக்­குது. ஒரே­ய­டியா வாங்க மாட்­டி­னம். அங்­கத்­தை­யக் காசு ஒண்­டெண்­பது முதல்­த­ரம் ரொக்­க­மாக் கட்­ட­வே­ணும். பிறகு பத்­தா­யி­ரம் ஐயா­யி­ரம் எண்டு சொல்லி மாச, மாசம் கட்­டிக்­கொண்டு வர­வே­ணும். அங்கை பில்­லு­கள் ஒண்­டும் தர­மாட்­டி­னம். கையிலதான் குடுக்­க­வே­ணும். ‘பில்’ கேட்­டால் ‘ரக்ஸ்’ பிரச்­சினை எண்டு சொல்­லு­வி­னம். நிறை­யக் காசைச் செல­வ­ழிச்­ச­து­தான். என்ன… பிள்ளை கிடைச்ச சந்­தோ­சத்­திலை இப்ப கட­னைக் கட்­டிக்­கொண்­டி­ருக்­கி­றன்…’’
சாந்­தன் மாத்­தி­ரம் இப்­படி ஆறு­தல் பட்­டுக்­கொள்­ள­வில்லை.

சாந்­த­னைப்­போல பலர் இப்­ப­டி­யாக ஏரா­ளம் பணத்­தைச் செலவு செய்து தாயா­க­வும், தந்­தை­யா­க­வும் தம்மை ஆக்­கிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். இவை எல்­லா­மும் எமது சமு­தா­யம் வாய­ள­வில் வைத்­தி­ருக்­கும் அந்த அரு­வ­ருப்­பூட்­டும் வார்த்தை தம்­மைச் சுடா­தி­ருப்­ப­தற்­கான பிர­யத்­த­னமே… இவர்­க­ளு­டைய இந்­தப் பிர­யத்­த­னத்­தைச் சரி­வ­ரப் பயன்­ப­டுத்­திப் பணம் சம்­பா­தித்­துக் கொள்­ளும் பெரும் சாமர்த்­தி­யம் இந்­தி­யா­வைச் சார்ந்­தி­ருக்­கின்ற அந்த மருத்­து­வக் குழு­வுக்­குக் கைவந்த கலை­தான்…

‘‘இவ்­வ­ளவு தூரம் வந்­திற்­றம்… இவ்­வ­ள­வைச் செல­வ­ழிச்­சும் போட்­டம்… இடை­யில விட முடி­யுமா? இன்­னும் கொஞ்­சம்­தானே கடனை உட­னைப் பட்­டா­வது ஒரு மாதி­ரிப் பிள்­ளை­யைப் பெத்­துக்­கொண்டு போகப் பாப்­பம்’’ சாந்­த­னைப்­போ­லல்ல கோகி­லா­வின் நிலை. ஒரு தட­வை­யில் அந்­தச் சிகிச்சை வெற்­றி­ய­ளிக்­காத துர­திர்ஷ்­ட­சா­லி­யான கோகிலா, தாய் ஆவ­தற்கு இன்­ன­மும் தவித்­துக் கொண்­டு­தான் இருக்­கி­றாள். தனது பிரச்­சி­னையை வெளியே கொட்­டி­விட்­டி­ருக்­கிற சாந்­தன்­போ­லில்­லா­மல் இப்­போ­தும் கோகிலா தலை­ம­றை­வா­கவே இருக்­கி­றாள். அந்த வார்த்தை தாயாக முடி­யாத அவளைத் துரத்­திக் கொண்டே இருக்­கி­றது. சந்­த­னைக் காட்­டி­லும் பணக் கொள்­ள­ள­வில் குறைந்­த­வள் கோகிலா. வெறும் ஒன்­பது, பத்து லட்­சங்­களே இதற்கு முடி­யும் என்று தாயா­கும் ஆசை அவ­ளுக்­குள் ஊட்­டப்­பட்­டி­ருக்­கி­றது.

ஆனால் அந்­தக் கருத்­த­ரிப்­புச் சிகிச்­சை­யைப் பல தட­வை­கள் அவ­ளு­டைய உட­லில் நிகழ்த்­தி­யும் வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. கடன்­கள் பட்­டும், காணி, பூமியை விற்­றும் இயன்­ற­வ­ரைக்­கும் பணத்தை இறைத்து முடித்த பின்னர் தோல்வியோடு தற்­போது வீட்­டில் வந்து இளைப்­பா­றிக் கொண்­டி­ருக்­கி­றாள் கோகிலா.

‘‘அந்­தச் சிகிச்­சை­யும் பொல்­லா­த­து­தான். ஆரம்­பிச்­சுச் சில மாசத்­திலை நான் நல்­லாக் கறுத்­துப்­போ­னன். உடம் ெபல்லம் உரோ­மங்­கள் கண்­ட­படி முளைக்­கத் தொடங்­கீ­ரும். அநே­க­மான ஆக்­கள் கறுத்­துத்­தான் பிறகு நிறம் மாறு­வி­னம். ஒவ்­வொரு நாளும் ஊசி­யும், மருந்­து­க­ளும்­தான். கை, கால்­கள் சில நேரங்­க­ளில மரத்­துப்­போ­னது மாதிரி இருக்­கும், ஆம்­பி­ளை­ய­ளுக்கு எந்­தப் பிரச்­சி­னை ­ய­ளும் இல்ல. எல்­லாம் தாய்க்­குத்­தான்’’ என்­கி­றாள் அந்­தச் சிகிச்சை பற்­றிய தனது அனு­ப­வத்தை.

ஆயி­னும் திரும்­ப­வும் முயற்­சிப்­பாள்­போல் இருக்­கி­றது. அந்­தச் சிகிச்­சைக்­காக அவள் செலவு செய்­த­ ப­ணத்­தின் இழப்­பைக் காட்­டி­லும் இந்­தச் சமூ­கம் சுட்­டும் அந்த வார்த்­தை­யைத்­தான் அவ­ளால் தாங்­கிக்கொள்ள முடி­ய­வில்லை. அத்­து­டன் தனது சமூ­கத்­தின் பல­வீ­னத்­தைக் கண்­ட­றிந்து பணம் தேடும் அந்த இந்­திய மருத்­துவ நாக­ரீ­கத்­தை­யும் அவள் அறி­வா­ளில்லை. பெயர் மாற்­றப்­பட்ட கோகிலா, சாவ­கச்­சே­ரி­யைச் சேர்ந்­த­வள்.

‘‘யாழ்ப்­பா­ணத்­திலை ஒரு தூத­ர­கம் மாதிரி வைச்­சி­ருக்­கி­னம். அது மூல­மாத் தொடர்பு கொண்­டு­தான் நாங்­கள் போன­னாங்­கள். என்­னைப் பார்த்த வி.ஓ.ஜிதான் அவை­ய­ளோட தொடர்­பு­கொள்­ளச் செய்­தார். அவை இந்­தி­யாக் காசுக்­குச் சொல்­லிச்­சி­னமோ, இல்­லாட்­டிக்கு இலங்­கைக் காசுக்­குச் சொல்­லிச்­சி­னமோ தெரி­யேல்லை ஏழு, எட்டு லட்சம் மாதி­ரித் தேவை எண்டிச்சினம். சிகிச்­சைக்­குப் போக ஒரு மூண்டு, நாலு லட்சம் செல­வுக்­குக் கொண்­டு­போ­னாக் காணும் எண்­டிச்­சி­னம்… ஆசை­யில கட­னப் பட்­டும் காணிய வித்­தும் காசத் திரட்­டிக் கொண்டு பிள்­ளை­யைப் பெத்­துக் கொண்டு வர­லாம் எண்­டு­போனா… கடை­சி­யாக முப்­பத்­தைஞ்சு லட்சம் வரை­யில் செலவு செய்­து­தான் குழந்தை கிடைச்­சுது. அது­வும் நிறை­யப்­போ­ராட்­டங்­க­ளைச் சந்­திச்­சிற்­றன்… காணிய வித்­திற்­றம்… இப்ப கட­னைக் கட்­டிக்­கொண்டு இர­வல் வீட்­டிலை இருக்­கி­றம்’’ இது­வும் பெயர் மாற்­றப்­பட்ட ஒரு­வர்­தான்.

இவர் வவு­னி­யா­வைச் சேர்ந்­த­வர். இவ­ரு­டை­ய­தும் உண்­மைக் கதை­தான். லண்­ட­னில் கற்ற இந்­தி­யா­வில் இந்­தச் சிகிச்சை முறை­யில் கொடி­கட்­டிப் பறக்­கின்ற பெண் மருத்­து­வர் ஒரு­வர்­தான் தங்­க­ளுக்கு இந்­தச் சிகிச்­சையை இந்­தி­யா­வில் பெற்­றுத்­த­ரு­வ­தற்­கான ஏற்­பா­டு­க­ளை யாழ்ப்பாணத்தில் வைத்துச் செய்து தந்ததாகக் கூறி­னார்.

‘‘சென்­னை­யில இருக்­கிற ஒரு ஆஸ்­பத்­தி­ரி­யி­லை தான் எனக்­குச் சிகிச்சை நடந்­தது. நாங்­கள் இப்­பி­டிக் குழந்தை பெறப்­போ­றம் இதுக்கு எவ்­வ­ளவு செல­வா­கும் எண்டு கேக்­கும்­போது, மொட்­டையா இவ்­வ­ளவு காசி­ருந்­தாக் காணும் குழந்தை ஒண்­டைப் பெத்­தெ­டுக்­க­லாம் எண்­டு­தான் சொல்­லிச்­சி­னம். பிறகு பிற­கு­தான் தெரிய வந்­துது… ஆஸ்­பத்­தி­ரிச் செல­வும் சிகிச்­சைச் செல­வும் கூடிக் கொண்டே போச்­சுது…’’ இவ­ரும் இந்­தச் சிகிச்­சைக்­கா­கப் பணத்தை ஏரா­ள­மா­கச் செலவு செய்­தி­ருக்­கி­றார்.

ஆனால் முத­லில் கூறிய சாந்­த­னைப்­போ­லவோ, கோகி­லா­வைப்­போ­லவோ இல்­லா­மல் பல நெருக்­க­டி­க­ளை­யும் சந்­தித்து இருக்­கி­றார். இவ­ரு­டைய கதை கொஞ்­சம் வித்­தி­யா­ச­மா­ னது. இங்­கி­ருந்து குறித்த சிகிச்­சைக்­கா­கச் செல்­வோ­ரில் கணி­ச­மா­ன­வர்­கள் எதிர்­நோக்­கு­கின்ற ஒரு பிரச்­சி­ னையை இவ­ரு­டைய கதை­யின் மூல­மாக உணர முடிந்­தது…

‘யாழ்ப்­பா­ணத்­திலை அவை­யின்ர முக­வ­ரிட்­டைப் பதிஞ்சு அவை மூல­மாக அங்­கை­போ­னம். அந்தத் தனியார் ஆஸ்­பத்­தி­ரிக்கு அதி­கா­லை­ய­ள­விலை கூட்­டிக் கொண்டு போச்­சி­னம். அங்­குள்ள விடு­தி­யிலை தங்­க­வைச்­சி­னம். சிகிச்­சைக்­குப் பணம் கட்­டு­மாறு சொல்­லிச்­சி­னம். ஐம்­ப­தா­யி­ரம் இந்­தி­யக் காசு கட்­டி­னம். அவ­ருக்­கும் சோத­னை­கள் செய்­தி­னம். அதுக்கு எட்­டா­யி­ரம் ரூபா கேட்­டிச்­சி­னம். ஆஸ்­பத்­தி­ரி­யிலை ஐஞ்சு நாள்­வ­ரைக்­கும் இருக்­க­லாம். எல்­லாமே இல­வ­சம் எண்­டு­தான் இஞ்­சை­யி­ருந்து வெளிக்­கி­டேக்க சொன்­னவை. ஆனா ஐஞ்சு நாள் கழிச்சு அங்க பில் வந்­துது. ஒரு லட்சத்து ஐம்­ப­தா­யி­ரம்!’’

இந்த ஒரு சம்­ப­வத்­தின் மூல­மாக அந்த வைத்­தி­ய­சா­லை­யின் தில்­லா­லங்­க­டியை அறிந்த இவர்­கள், அதற்­குப் பிற­கு­தான் சாந்­தன் கூறி­ய­து­போல வைத்­தி­ய­சா­லையை அண்­மித்த பகு­தி­யில் வாட­கைக்­குக் குடி­ய­மர்ந்து தமக்­கான சிகிச்­சையை மேற்­கொண்டு திரும்­பி­யி­ருக்­கி­றார்­கள். குறித்த சிகிச்சை முறை­க­ளை­யும் அவை பற்­றிய விளக்­கங்­க­ளை­யும் குழந்­தைப்­பேறுக்­கா­கச் செல்­லும் இவர்­கள் போன்­ற­வர்­க­ளுக்கு இதி­லீ­டு­ப­டும் வர்த்­த­கர்­கள் சரி­வ­ரத் தெளி­வு­ப­டுத்­து­வ­தில்லை. வியா­பார உத்­தி­யாக, அந்­தச் சிகிச்­சைக்­கு­ரிய அடிப்­ப­டைப் பணத் தொகையை மாத்­தி­ரம் குறிப்­பிட்டு, அவ்­வ­ளவே செல­வா­கும் எனக்­கூறி, ஆசை காட்­டு­கி­றார்­கள். இத்­த­கைய மருத்­துவ வியா­பா­ரத்­துக்­குள் உள்­ளீர்க்­கப்­பட்ட பலர் சாந்­த­னைப்­போல பெரும் சிர­மப்­பட்டு இதில் வெற்றி பெற்று மீள்­கி­றார்­கள். அத்­து­டன் கோகி­லா­வைப்­போல பலர் ஏலவே தாம் சுமந்து நிற்­கிற பழிச்­சொல்­லோடு இந்த இழப்­பை­யும் சேர்த்தே சுமக்­கி­றார்­கள்.

சோத­னைக்­கு­ழாய்க் குழந்­தைக்­கான சிகிச்­சையை மேற்­கொள்­வ­தற்கு ஒரே ஒரு தெரி­வாக இருப்­பது இந்­தி­யாவே. குறித்த தொழில்நுட்­பத்­துக்கு உள்ள பணக் கேள்­வி­யும், இந்­தி­யப் பணப் பெறு­ம­தி­யும், இந்த மருத்­து­வத்­தில் இருக்­கின்ற ‘தர­கர்’ வலை­ய­மைப்­புமே இதில் பணத்­தைக் கறந்து விடு­வ­தில் முன்­னிற்­கின்­றன. இருந்­தும் கணி­ச­மா­ன­வர்­கள் இந்­தி­யாவை நாடிச் செல்­வது தொடர்­க­தை­தான். இதற்­கு­ரிய முதன்­மைக் காரணி அந்­தப் பழிச் சொல்­லில் இருந்து விடு­பட்­டுக் கொள்­வதே! அத்­து­டன் கண்­ணுக்­குத் தெரி­யாத காரணி ஒன்­றும் இருக்­கி­றது. குறித்த சிகிச்­சையை இங்கு செய்­வ­தற்­கான எத்­த­னங்­கள் எது­வு­மில்லை. அரசு இந்­தச் சிகிச்­சைக்கு ஆத­ர­வ­ளிக்கத் தயங்குகின்றது.

இதற்­கா­கக் குரல் கொடுக்­க­வேண்­டிய அரச அதி­கா­ரி­களோ, அர­சி­யல்வாதி­க­ளோ­கூட மாகாண, மாவட்­டங்­க­ளில் இல்லை. ஆனால், தெல்­லிப்­பளை ஆதார வைத்­தி­ய­சா­லை­யில் தனிநபர்களின் முயற்சியால் பெரும் சிர­மத்­தின் மத்­தி­யில் இதற்­கான முதற்­கட்ட அல்­லது அடிப்­ப­டைச் சிகிச்சை முறை என்று கரு­தத்­தக்க ‘ஐ.யு.ஐ.’ சிகிச்சை முறை முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது. வசதி வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்த விளைந்­தால் கார­ணங்­களே அங்­கும் விடை­யாகி நிற்­கின்­றன. அரச கட்­ட­மைப்­புக்­க­ளி­லுள்ள குறை­பா­டு­கள் தெரிந்­த­வை­தான். அங்கு அதிக நெருக்­க­டி­கள் ஆத­லால் அதிக காத்­தி­ருப்­புக்­கள்.

இயல்­பான முறை­யில் உட­லு­றவு கொண்டு கண­வன் – மனை­வி­யால் குழந்தை ஒன்­றைப் பெற்­றுக்­கொள்ள முடி­யாத நிலை ஏற்­ப­டு­வது வட பகு­தி­யைப் பொறுத்­த­வரை அதி­க­ரித்­துக்­கொண்டே செல்­கி­றது. இதற்­கு­ரிய முதன்­மைக் கா­ர­ணங்­க­ளா­கப் பிந்­திய வய­துத் திரு­ம­ணங்­க­ளும் உண­வுப் பழக்க வழக்­கங்­க­ளும் கூறப்­ப­டு­கின்­றன. பிந்­திய வய­துத் திரு­ம­ணங்­கள் ஆனவை சீத­னம் மற்­றும் போர் ஏற்­ப­டுத்­திச் சென்ற வடுக்­கள் கார­ண­மா­கச் சாத்­தி­ய­மா­னவை. ஆய்­வு­கூ­டத்­தில் உற்­பத்­தி­யாக்­கப்­ப­டும் தற்­கால விதைப் பயன்­பா­டும் அவற்றை மருந்­து­கள், நாசி­னி­கள் விசிறி விளை­விப்­ப­து­வும் உண­வுப்­ப­யன்­பாடு வழி­யாக இதில் தாக்­கம் செலுத்­து­கின்­றது. இவையே குழந்­தைப்­பே­றின்மைக்­கு­ரிய முதன்­மைக் கார­ணி­க­ளாக இது­வரை இனங்­கா­ணப்­பட்­டுள்­ளன.

மாத­வி­டாய் ஆரம்­பித்த நாளில் இருந்து 12தொடக்­கம் 16 நாள்க­ளுக்­கி­டை­யில் பெண் ஒரு­வ­ருக்கு முட்­டை­யா­னது சூல­கத்­தி­லி­ருந்து வெளிப்­ப­டு­கி­றது. வெளிப்­பட்ட முட்டை பலோப்­பி­யன் குழாய் வழி­யா­கக் கருப்­பையை நோக்­கிப் பய­ணிக்­கி­றது. இந்­தப் பரு­வத்­தில் உட­லு­றவை மேற்­கொண்டு கண­வர் விந்­தைச் செலுத்­தும் பட்­சத்­தில் அது கருப்­பைக் கழுத்­துக்கு அரு­காக விடப்­ப­டு­கி­றது. பின்­னர் பலோப்­பி­யன் குழாய்க்­குள் விந்­தும் கரு­முட்­டை­யும் இணைந்து கருக்­கட்­டல் நிக­ழும். கருக்­கட்­டப்­பட்ட முட்டை மெல்ல மெல்ல கருப்­பைக்­குள் நகர்ந்து சென்று கருப்­பை­யின் உட்­சவ்­வுக்­குள் பொதிந்து குழந்­தை­யாக வள­ரும். இதுவே இயற்­கை­யான கருக்­கட்­டல். இது சாத்­தி­ய­மா­கா­த­வர்­கள் மேலே குறிப்­பிட்ட ‘ஐ.யு.ஐ.’ சிகிச்­சையை மேற்­கொண்டு சாத்­தி­யப்­ப­டுத்­திக்கொள்­ள­லாம். இந்­தச் சிகிச்­சை­யின்­மூ­லம் விந்­த­ணுக்­க­ளைச் செறிவுபடுத்­திச் சிறிய குழாய் ஒன்­றின் மூலம் கருப்­பைக்­குள் செலுத்­து­கி­றார்­கள். இதி­லும் பல முறை­கள் இருக்­கின்­றன. கருப்­பைக்­குள் செலுத்­தப்­பட்ட விந்­த­ணுக்­கள் பெண்­ணின் கரு முட்­டை­யு­டன் இணைந்து இந்த முறை­யி­லும் கருக்­கட்­டல் நிக­ழ­வில்லை என்­றால், அடுத்த கட்­டம் ‘ரெஸ்ற் ரியூப் பேபி’.
கண­வ­ரின் விந்­தை­யும், மனை­வி­யின் கரு முட்­டை­யை­யும் பெற்று ஆய்­வு­கூ­டச் செயன்­மு­றை­யூ­டா­கக் பரி­சோ­த­னைக்­கு­ழாய் ஒன்­றுக்­குள் இரண்­டை­யும் பிணைப்­பித்­துக் கருக்­கட்­டச் செய்­வது. இது ‘ஐ.வி.எவ்’. அந்­தக் கரு­வைப் பின்­னர் கருப்­பைக்­குள் பதிக்­கி­றார்­கள். இதி­லும் இன்­னொரு வகை­யான நுண்­ணிய சிகிச்சை முறை­யும் இருக்­கி­றது. கரு முட்­டைக்­குள் புக முடி­யா­த­வாறு விந்­த­ணுக்­கள் வீரி­யம் குறைந்து இருந்­தால் கரு­முட்­டை­யில் நுண் துளையை ஏற்­ப­டுத்தி விந்­த­ணுக்­களை உட்­செ­லுத்­திக் கருக்­கட்­டச் செய்­வது. இயல்­பான கருக்­கட்­ட­லில் இருந்து விலகி, இந்த வழித் தொழில்­நுட்­பங்­களை நாடும்­போது இவை அனைத்­தும் ஒரு தட­வை­யில் சாத்­தி­ய­மா­கா­வி­டில் அவர்­கள் துர­திர்ஷ்­ட­சா­லி­கள்­தான்!

‘‘ஐ.யு.ஐ. என்­பது குழந்தை இல்­லாத தம்­ப­தி­யி­ன­ரில் மேற்­கொள்­ளும் முதற்­கட்ட சிகிச்சை. பெண்­ணுக்­குச் சூல் முட்­டை­கள் உரு­வாக்­கு­வ­தற்­கான மருந்­து­களை அளித்து, அந்த முட்டை உற்­பத்தி சரி­வர நடந்­தி­ருக்­கி­றதா? என்று மாத­வி­டாய் ஏற்­பட்ட பன்­னி­ரண்­டா­வது நாளில் பரி­சோ­தனை மூலம் அறிந்து, சூலை வெளி­யேற்­று­வ­தற்­கு­ரிய ஊசி மருந்­தைச் செலுத்­தி­னால், 36மணித்­தி­யா­லங்­க­ளுக்­குள் அந்­தப் பெண்ணுக்குச் சூல் வெளி­யா­கும். ஒரு சூலை உரு­வாக்­கு­வதே எங்­க­ளு­டைய நோக்­க­மா­க­வி­ருந்­தா­லும் இதன்­போது இரண்டு, சூல்­க­ளும் உரு­வா­க­லாம். இந்த நேரத்­தில் கருக்­கட்­ட­லைச் செய்­வ­தற்­கா­கக் கண­வ­னின் விந்தை வெளியே எடுத்­துப் பரி­ சோ­த­னைக் குழாய்க்­குள் சேக­ரித்து, அதை ஆய்­வு­கூ­டத்­தில் வைத்­துக் குறிப்­பிட்ட அள­வு­டைய நல்ல விந்­து­களை மாத்­தி­ரம் பிரித்­தெ­டுத்­துக் கருப்­பைக்­குள் குழாய் மூலம் செலுத்­திக் கருக்­கட்ட வைக்கி றோம். இந்­தச் சிகிச்­சையை யாழ்ப்­பா­ணத்­தில் செய்­து­ கொள்­ள­மு­டி­யும். மகப்­பேற்று வைத்­திய நிபு­ணர் க­ளின் கட்­டுப்­பாட்டில் இருக்­கின்ற சில ஆய்­வு­ கூ­டங்­க­ளிலை இதைச் செய்­ய­லாம். கண­வ­னின் நல்ல நிலை­யி­லுள்ள விந்­து­க­ளைப் பிரித்­தெ­டுப்ப­தற்கு முப்­பது தொடக்­கம் நாற்­பது நிமி­டங்­கள் செல்­லும். இந்த விந்­து­களை கர்ப்­பப் பைக்­குள் குழாய் மூலம் செலுத்­தும் வசதி இங்­குள்­ளது.
யாழ்ப்­பா­ணத்­தைப்­பொ­றுத்­த­வ­ரை­யில இந்­தச் சிகிச்சை தொடங்கி ஐந்­தாறு வரு­டங்­கள் ஆகின்­றன. இதற்­குப் பயன்­ப­டுத்­திக்­கொள்­கின்ற மருந்­து­க­ளைப் பொறுத்­துக் கட்­ட­ணங்­கள் அமை­யும். இதை ஒரு முறை செய்­வ­தற்கு ஆறா­யி­ரம் தொடக்­கம் ஏழா­யி­ரத்து ஐந்­நூறு வரை செல­வா­கும். இந்­தச் சிகிச்சை முறை அரச மருத்­துவ மனை­க­ளில் இல்லை. இதற்­குப் பயன்­ப­டுத்­திக் கொள்­கிற ஊசி மருந்­தும், விந்­தைச் செலுத்­து­கிற குழா­யும் அங்கு இல்லை. அதே­நே­ரம் விந்­தைத் தயார்ப்­ப­டுத்­து­கின்ற வச­தி­க­ளும் அரச மருத்­து­வ­ம­னை­க­ளில் இல்லை. தெல்­லிப்­பழை வைத்­தி­ய­சா­லை­யில் மாத்­தி­ரம் இந்­தச் சிகிச்சை செய்­யப்­பட்­டா­லும் அது தனிப்­பட்­ட­வர்­க­ளின் முயற்சி.  இதற்கு அடுத்­த­கட்­டமே ‘ஐ.வி.எவ்’. இது நுணுக்­க­மான நடை­முறை. இதற்கு ‘எம்ப்­றோ­லோ­ஜிஸ்ற்’ (செயற்கை முறை­யில் கருக்­கட்டி உரு­வான நல்ல நிலை­யி­லுள்ள சிசு­வைப் பிரித்­தெ­டுப்­ப­ தற்­கு­ரிய நிபு­ணர்) என்­கிற வல்­லு­நர் தேவை. வெளியே எடுக்­கப்­பட்ட விந்­த­ணு­வும் கரு முட்­டை­யும் இணைந்து கருக்­கட்­டி­ய­ பின்­னர் தாயின் கர்ப்­பப் பைக்­குள் வைத்து வளர்க்­கக்­கூ­டி­ய­தான நிலை­யி­லுள்ள கரு­வைத் தெரிந்­தெ­டுத்து அதைக் கர்ப்­பப் பைக்­குள் செலுத்­து­ப­வர். இலங்­கை­யைப் பொறுத்­த­வரை இவ­ருக்­குத் தட்­டுப்­பாடு. இத­னால்­தான் அநே­க­மா­ன­வர்­கள் இந்­தி­யா­வுக்­குப் போக­வேண்­டி­யி­ருக்­கி­றது. இதில் நாங்­கள் முன்­னேற்­றம் காண­வில்லை. இதற்­கு­ரிய ஆய்­வு­கூ­டத்தை அமைப் பதற்கு நான்கு கோடி­க­ளுக்­குக் கிட்­டத்­தேவை. தொடர்ந்து கொண்டு நடத்­து­வ­தற்­கு­ரிய செல­வும் அதி­கம். தனி­யார்­கள் உரு­வாக்­கு­வ­தற்­குக் கொஞ்­சக் காலம் செல்­லும். இந்­தச் சிகிச்­சையை இங்­கு­மேற்­கொள்­வ­தா­யின் பத்து தொடக்­கம் பதின்­மூன்று இலட்­சங்­க­ளுக்­குள் செய்­து­கொள்­ள­லாம்’’ ஆரம்­ப­கட்டமான செலவு குறைந்த ‘ஐ.யு.ஐ.’ சிகிச்சையையே செய்ய முன் வராத அரசு அதிலும் அதிக செலவுடைய ‘ஐ.வி.எவ்.’ஐச் செய்ய முன்­வ­ரு­வது சாத்­தி­ய­மில்லை என்­கி­றார் மகப்பேற்று பெண் நோயி­யல் மருத்­துவ நிபு­ணர் குல­சிங்­கம் சுரேஸ்­கு­மார்.

‘‘செயற்கை முறைக் கருத்­த­ரிப்­பில் பல படி­மு­றை­கள் இருக்­கின்­றன. முத­லா­வது தான் ‘ஐ.யு.ஐ.’ கண­வ­ரின் விந்தை எடுத்­துக் கர்ப்­பப் பைக்­குள் வைக்­கின்ற சிகிச்சை. இதைக் குறைந்­தது ஆறு தட­வை­கள் முயற்சி செய்து பார்க்­க­லாம். இய­லாத பட்­சத்­தில் அடுத்­த­கட்­டத்­துக்­குப் போக­லாம். அது ஐ.வி.எவ். ஆணுக்கு ஒரே ஒரு பரி­சோ­தனை. அவ­ரு­டைய ஆண்­மைத் தகவை அறி­வது. அவ­ரு­டைய விந்­தில் உயி­ர­ணுக்­கள் இருக்­கின்­ற­னவா? எனக் கண்­ட­றி­வது. உயி­ர­ணுப் பரி­சோ­தனை. கண­வர் கருக்­கட்­டக்­கூ­டிய ஆற்­ற­லுள்ள விந்­துக்­க­ளைக் கொண்­டி­ருக்­கி­றாரா இல்­லையா? என அறி­வது. அத்­து­டன் மதுப்­ப­ழக்­கம், புகைத்­தல், கூவக்­கட்டு வருத்­தம், விதைப் பையப் பாதிக்­கக்­கூ­டிய விபத்­துக்­கள், அறு­வைச் சிகிச்­சை­கள் நிகழ்ந்­தி­ருந்­தா­லும் விந்­தின் வீரி­யம் குறைந்­தி­ருக்க வாய்ப்­புண்டு. ஆண் மலடு என்று இவ்­வா­றா­ன­வர்­களை வகைப்­ப­டுத்­த­லாம்.
பெண்­ணில், கருக்­கட்­டக்­கூ­டிய முட்டை மாதம் மாதம் வரு­வ­தில் பிரச்­சினை இருக்­கி­றதா, முட்­டை­யின் தகமை குறை­வாக இருக்­கி­றதா? என்று சோதிக்க வேண்டும். திரு­ம­ண­மாகி ஒரு வரு­டத்­துக்­குள் கருத் தங்­காத பட்­சத்­தில் பரி­சோ­திக்­க­வேண்­டி­யது அவ­சி­யம். முட்­டைப் பையைத் தூண்டி முட்­டை­களை உற்­பத்தி செய்­யக்­கூ­டிய மருந்­து­க­ளைப் பெண்­ணுக்கு அளிக்­க­லாம். உடல் நிறை­யைக் குறைப்­பது, சாப்­பாடு மற்­றும் இனிப்­பு­ண­வு­க­ளைக் குறைப்­ப­தும் முட்­டைப் பெருக்கத்தைத் தூண்­டும். இதன்­போது அதி­க­மா­ன­வர்­க­ளுக்­குக் கருக்­கட்­டு­வது சாத்­தி­ய­மா­கி­யி­ருக்­கி­றது. இந்­த­முறை வெற்­றி­ ய­ளிக்­கவில்லை என்­றால், ‘ஐ.யு.ஐ.’ சிகிச்சை முறை­யைச் செய்­ய­லாம்.
கண­வ­ரின் விந்­த­ணுக்­க­ளின் எண்­ணிக்கை குறை­வாக இருந்­தால், அவ­ரு­டைய விந்­துக்­களை எடுத்­துச் செறிவுபடுத்தி மனை­வி­யின் கர்ப்­பப் பைக்­குள் செலுத்­தப்­ப­டும். இதைச் செய்­வ­தற்கு ஒரு ‘கலீற்­றர்’ வேணும். இதற்கு ஒரு ஆயி­ரம் ரூபா செல­வா­கும். இதற்­கான ஒரு ஆய்­வு­கூ­டம் தேவை. பயிற்­று­விக்­கப்­பட்ட மகப்­பேற்று நிபு­ணர்­கள் செய்­வார்­கள். அர­சு இப்­பி­டி­யான சிகிச்­சைக்கு முக்­கி­யத்துவம் கொடுப்­ப­தில்லை. தனி­யார்­கள் மூல­மா­கவே இதைச் செய்ய முடி­கி­றது. சில நேரம் இந்­தக் கலீற்­றர்­களை வாங்­கித் தரச் சொல்­லி கேட்க முடி­கி­றது. இதற்கு ஐந்­நூறு ரூபா செல­வா­கும். அரச மருத்­து­வம­னை­யில் செய்­தால், ஆயி­ரம் ரூபா­வுக்­குள் இந்­தச் சிகிச்­சைக்­கான செலவை முடித்­துக்­கொள்ளலாம் தனி­யார்­க­ளில் இதைச் செய்­வ­தற்கு ஆறா­யி­ரம் வரை­யில் முடி­யும். இந்­தச் சிகிச்சை வெற்­றி­ய­ளிக்­கா­வி­டில் அடுத்த கட்­டமே ஐ.வி.எவ். ‘‘ரெஸ்ற் ரியூப் பேபி’’.
இப்ப இலங்­கை­யி­லும் செய்­ய­லாம். இங்கு வெற்­றி­ய­ளிப்­பது 60வீத­மாக இருக்­கி­றது. முத­லில் தாயைத் தயார்ப்­ப­டுத்தி, முட்­டைப்பை, சூல­கத்­தின் செயற்­பாட்டை ஒழுங்குபடுத்­திய பின்­னர் தேவை­யான ஓர்­மோன் ஊசி­ம­ருந்­து­களை அளிப்­ப­தன் மூ­லம் ஒன்­றுக்கு மேற்­பட்ட முட்­டை­களை உரு­வாக்­க­வேண்­டும். பிறகு ஊசி மூலம் முட்­டை­களை வெளியே எடுப்­பார்­கள். உறை­நி­லை­யில் பரா­ம­ரிப்­பார்­கள். கண­வ­னின் விந்­த­ணுக்­க­ளை­யும் எடுத்து ஆய்­வு­கூ­டப் பரி­சோ­த­னைக் குழாய்க்­குள் விந்­தை­யும் முட்­டை­யை­யும் ஒன்­றாக வளர்ப்­பார்­கள். முளை­யத்தை உரு­வாக்­கு­வார்­கள். சில­ர் விடயத்தில் முட்­டைக்­குள் விந்­தைப் புகுத்­த­வேண்­டி இருக்­கும். இதில் படி­மு­றை­கள் அதி­க­ரிக்க அதி­க­ரிக்க பண­மும் அதி­க­ரிக்­கும். இலங்­கை­யில் செய்­வ­தா­னால் எட்­டி­லி­ருந்து பத்து இலட்­சம் ரூபாய்க­ளுக்­குள் செய்ய முடி­யும். முன்­ன­ரான காலத்­தில் இலங்­கைக் காசுக்கு இந்­தச் சிகிச்­சையை இந்­தி­யா­வுக்­குப்­போய்ச் செய்­து­வர முப்­பது, நாற்­பது இலட்­சங்­கள் முடிந்­தது. இப்­போ­தும் அப்ப­டித்­தான். அங்கு தேவை­யற்ற செல­வு­க­ளும் ஏற்­ப­டும். போய் வரு­வது. தங்­கு­மி­டம் உட்­பட. இந்த ஆய்­வு­கூ­டங்­களை இங்கு வைத்­தி­ருப்­ப­தா­னால் கொண்டு நடத்­தும் செலவு அதி­கம். 24மணி­நே­ர­மும் மின்­சா­ரம், வெப்­ப­நி­லை­யைச் சமச்­சீ­ரா­கப் பேணக்­கூ­டிய தொழில்­நுட்­பங்­கள் பொருத்­தப்­பட்­டி­ருக்­க­வேண்­டும். ஏனைய தொழில்­நுட்ப விட­யங்­க­ளைச் சரி­வ­ரப் பரா­ம­ரிக்­க­வேண்­டும். சிகிச்­சையை மேற்­கொள்­ளும் நேரம்­வரை வெப்­ப­நிலை மைனஸ் கண்­றட் அன் எயிற்ரி டிகிரி யாக வைச்­சி­ருக்­க­வே­ணும். நிறை­யத் தொழில்­நுட்­பங்­க­ளைச் சரி­வ­ரப்­பே­ணிக்­கொள்­ள­வேண்­டும். கொழும்­பில் இந்­தச் சிகிச்­சையை அளிக்­கும் ஏராளம் நிறு­வ­னங்­கள் இருக்­கின்­றன. எல்­லாமே தனி­யார்­தான். அரசு இது­போன்ற சிகிச்­சை­க­ ளுக்கு முத­லி­டு­வது இல்லை. அர­சின் கொள்கைகளில் இதெல்­லாம் இல்லை. இனி­வ­ரும் காலங்­க­ளில் வர­லாம். ஆனால் பில்­லி­ய­ன­ ளவு பணம் முத­லி­டப்­ப­ட­வேண்­டும். ‘ஐ.யு.ஐ’ சிகிச்­சைக்­குக்­கூட அரசு ஆத­ர­வ­ளிப்­ப­தில்லை’’ என்கிறார் மகப்பேற்று பெண் நோயியல் மருத்துவ நிபுணர் கந்தையா குருபரன்.