மலேசியாவின் மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மத், யங் டி- பெர்துவன் அகாங் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவி விலகினார். ஆனால் பதவி விலகியதற்கான எந்தவொரு காரணத்தையும் அவர் குறிப்பிடவில்லை.

ரஷ்யாவின் முன்னாள் மாடல் ஒருவரை அவர் திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியான நிலையில் அவர் பதவி இறங்கும் அறிவிப்பு வந்திருக்கிறது. ஆனால் அரண்மனையில் இருந்தோ அல்லது மலேசிய அரசுத் தரப்பிலிருந்தோ இந்த திருமணம் குறித்து அறிவிக்கப்படவில்லை.

மன்னர் பதவி இறங்கியது மலேசியாவில் பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியிருக்கிறது. மேலும், உள்ளூர் அரசியலில் ஒரு நுட்பமான மாற்றத்தையும் உண்டாக்கியிருக்கிறது.

அரண்மனையோ, அரசோ, அரசரோ இதுவரை ஐந்தாம் முகமது பதவி இறங்கியதற்கான காரணத்தை வெளியிடவில்லை.

மாட்சிமை பொருந்திய அரசர் மலேசிய ஆட்சியாளர் மாநாட்டின் செயலருக்கு அனுப்பிய அதிகாரபூர்வ கடிதத்தில் இந்தப் பதவி இறங்குதல் குறித்து விவகாரம் குறித்து ஆட்சியாளர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

அரசர் தனது சொந்த மாகாணமான கேலன்டனுக்கு திரும்பி மாகாண அரசுடனும், கேலன்டன் மக்களுடன் சேர்ந்து அம்மாகாண மக்களின் நலனுக்கு துணை நிற்கவும், அதனை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்லவும் தன்னை தயார் படுத்தி வருகிறார் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.