நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்.ஜோன் டிலரி தோட்டப் பகுதியில் தாழிறக்கம் ஏற்பட்டதினால் அந்த பிரதேசத்தில் உள்ள எட்டு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அந்த வீடுகளில் வசித்த எட்டு குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள், பெரியவர்கள் உட்பட 47 பேர் சென். ஜோன் டிலரி சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு அம்பகமுவ பிரதேச செயலகத்தின் இடர்முகாமைத்துவ நிலையத்தினால் கிராம சேவகர்கள் ஊடாக சமைத்த உணவு வழங்குவதற்கும் அடிப்படைகளை வசதிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

மலையத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாகவே தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது.

பாதிப்புக்குள்ளானவர்கள் கருத்து தெரிவிக்கையில், தாங்கள் சிறு பிள்ளைகளுடன் வாழ்வதாகவும் 1980 காலப்பகுதியில் கட்டப்பட்ட வீடுகளிலேயே தாங்கள் வாழ்ந்து வருவதாகவும்? தெரிவித்துள்ளனர்.

மழை காலத்தில் தாங்களுக்கு அந்த வீடுகளில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நிவாரணம் எதுவும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.

தங்களுக்கு வீடுகளை மாத்திரம் பெற்றுக்கொடுத்தால் போதுமானது என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடும் மழை காரணமாக எட்டு வீடுகள் தாழிறக்கத்திற்கு உள்ளாகி சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளன.

சில வீடுகளில் சுவர்கள் இடிந்துள்ளதுடன் கூரைகளும் உடைந்து சேதமாகியுள்ளன.

இதேவேளை, நோட்டன் பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர்தேக்கத்தில் நீர் நிரம்பி வழிவதாக மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்

நீர்தேக்கத்தை அண்மித்தவர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

தொடர் மழையினால் நீரேந்தும் பகுதிகளில் நீர் நிறைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

மேலும், மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் வான் கதவு ஒன்றும் திறந்துவிடப்பட்டுள்ளது.