அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையக் கட்டடத்தின் மீது 11-9-2001 அன்று விமானங்களை மோதவிட்டு அல் கொய்தா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மோதிய நான்கு விமானங்களில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர்.
இதில் 246 பேர் பொதுமக்கள். 19 பேர் பயங்கரவாதிகள், உலக வர்த்தக மையக் கட்டடத்தின் இரு கோபுரங்களும் தீப்பற்றி எரிந்தன. தென்கோபுரம் 56 நிமிடங்கள் தீப்பிடித்து எரிந்து பிறகு நொறுங்கி விழுந்தது. வடகோபுரம் 102 நிமிடங்கள் பற்றி எரிந்து நொறுங்கியது.
இந்தத் தாக்குதல்களில் மொத்தம் 2,973 பேர் கொல்லப்பட்டனர். இதில் 300 பேர் வெளிநாட்டவர் ஆவர். இதற்கு பழிக்குப்பழியாய் அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானுக்குள் நுழைந்து அமெரிக்க சீல் படையினர் சுட்டுக் கொன்றனர்.
அவரை கொன்ற பின்னர் அல் கொய்தாவின் ஆதிக்கம் அழிந்து விட்டதாக பரவலாக பேசப்பட்டது. எனினும், அந்த இயக்கத்தின் முக்கிய தளபதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகளில் சேர்ந்து வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், முன்னர் பலமிழந்தும் உதிரிகளாகவும் இருந்த அல் கொய்தா பயங்கரவாதிகள் மீண்டுன் பலம்பெற்று மிகப்பெரிய தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு வருவதாக பிரிட்டன் நாட்டு உள்துறை மந்திரி பென் வேல்லஸ்பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, பிரிட்டன் நாட்டின் விமான நிலையங்கள் மற்றும் விமானங்களை தாக்கி மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்த அவர்கள் ஆயத்தமாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.