வேட்டையாடி மாமிசத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்த, நெருப்பை பயன்படுத்தத் தொடங்கிய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் முதலில் எப்போது பேசத் தொடங்கினார்கள்?

இன்றைக்கு புழக்கத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான மொழிகளுக்கு மூலமான ஒரே மொழி எதுவென்று சுவடுகளைக் கண்டுபிடிப்பது சாத்தியமா?

”மனிதர்கள் மட்டுமே மொழியைப் பயன்படுத்தும் உயிரினமாக இருக்கிறார்கள். விலங்குகளிடம் இருந்து நம்மை தனித்துவமாக்கிக் காட்டுவதும் அதுதான்,” என்று நியூகேசில் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறை பேராசிரியராக இருக்கும் மேக்கி டாலர்மேன் கூறியுள்ளார்.

உரையாடுவதற்கான இந்தத் திறன்தான் பரிணாம வளர்ச்சியில் முக்கியமான நிலைமாறுதலாகக் கருதப்படுகிறது. வாழ்க்கை நிலையில் மாறுதலை ஏற்படுத்தியதில் மற்றவற்றைக் காட்டிலும், உண்மையான அம்சம் இதுதான். அதனால்தான் மொழியின் பூர்வீகத்தைக் கண்டறிவதில் மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். எப்போது மொழி தோன்றியிருக்கும் என ஆச்சர்யப்படுகிறார்கள்.

”நம்மை மனிதர்களாக ஆக்கும் சற்று சிக்கலான விஷயமாக மொழி இருக்கிறது,” என்று சொல்கிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மானிட பரிணாம வளர்ச்சித் துறை பேராசிரியரும், மானுடவியலாளருமான ராபர்ட் போலே.

இப்போதைய காலக்கட்டத்தில் உலகில் 6,500 மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால் இவற்றில் மிகவும் பழமையானது எது என்பதை விஞ்ஞானிகள் எப்படி கண்டுபிடிப்பார்கள்?

”தொன்மையான மொழி” எது என்று கேட்டால் பாபிலோனிய மொழி, தமிழ், சமஸ்கிருதம் அல்லது பழங்கால எகிப்து மொழி என்று நாம் நினைக்கலாம்.

ஆனால், ஆரம்ப காலத்தின் அருகே இவையெல்லாம் செல்லவே முடியாது என்கிறார் பேராசிரியர் டாலர்மேன். தொன்மையான மொழிகள் நாம் குறிப்பிடும் பெரும்பாலான மொழிகள் எதுவுமே 6,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை அல்ல. இப்போதுள்ள நவீன மொழியாகவும் அவை இல்லை என்கிறார்.

உண்மையான தொடக்கம் குறைந்தபட்சம் 50,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்பதற்கான சுவடுகள் உள்ளன. மொழியின் தோற்றம் அதைவிடவும் பழமையானதாக இருக்கலாம் என்று பெரும்பாலான மொழியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இன்றைக்கு உலகில் பேசப்படும் பல்வேறு மொழிகள் பற்றிய ஆதாரங்கள் நிறைய இருந்தாலும், இப்போதைய மொழிகள் அனைத்துமே பொதுவான ஒரு தொன்மொழியில் இருந்து உருவானவையாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்கிறார் பேராசிரியர் போலே.

நமது பரிணாம வளர்ச்சியின் உயிரியல், மரபியல் மாற்றத்தின்படி ஆப்பிரிக்காவில் சிறிய மக்கள் குழுவிடம் இருந்துதான் இந்த மொழிகள் தோன்றியிருக்க வேண்டும்.

இந்தத் தோன்றல் வழிகளில் இருந்து சில மொழிகள் மாறுபட்டவையாக இருந்தாலும், இப்போது நாம் காணும் மொழிகள், ஒரே மொழியில் இருந்து மாற்றங்களைப் பெற்று உருவானவையாகத் தோன்றுகிறது.

முற்கால மனிதர்கள் சுற்றுச்சூழலை அதிகமாகப் பயன்படுத்திக் கொள்ளவும், வெவ்வேறு உணவு சாப்பிடவும், அதிகம் பேசுவதற்கு, மற்றவர்களுடன் ஒத்துழைப்பதற்கு தொடங்கியிருக்கலாம் என்று பேராசிரியர் டாலர்மேன் தெரிவித்துள்ளார்.

”ஆதிகால மொழியில் இருந்து நவீன மொழிக்கான மாற்றம் என்பது கடினமான மாறுதலாக இருந்திருக்கும். ஆனால், இன்றைக்குப் பேசப்படும் எல்லா மொழிகளுமே ஒரே அளவுக்கு கலப்பு கொண்டவைதான்” என்கிறார் பேராசிரியர் போலே.

”இந்த அனைத்து வெவ்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் குறைந்தபட்சம் 100,000 ஆண்டுகள் அல்லது அதற்கு முன்பு பன்முகத்தன்மையோடு வாழ்ந்திருப்பார்கள் என்று நமக்குத் தெரியும். எனவே, குறைந்தபட்சம் அப்போதும் கலப்புகள் இரு்திருக்கும்,” என்று அவர் கூறியுள்ளார்.