2019 ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் தனது வழக்கப்படி புதிய ஐபோன்களை வெவ்வேறு அளவுகளில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

2018 ஆம் ஆண்டில் ஐபோன் XS (5.8 இன்ச்), ஐபோன் XS மேக்ஸ் (6.5 இன்ச்) மற்றும் ஐபோன் XR (6.1 இன்ச்) என மூன்று ஐபோன்களை அறிமுகம் செய்தது. இந்த ஆண்டும் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் XS மற்றும் ஐபோன் XR மாடல்களின் மேம்பட்ட ஐபோன்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் 5.8, 6.5 இன்ச் அளவுகளில் OLED டிஸ்ப்ளே கொண்ட ஐபோன்களையும், 6.1 இன்ச் LCD டிஸ்ப்ளே கொண்ட ஐபோனை அறிமுகம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஐபோன்கள் ஐபோன் XI அல்லது ஐபோன் 11 என அழைக்கப்படலாம். எனினும், தற்சமயம் இவை 2019 ஐபோன்கள் என்றே அழைக்கப்படுகின்றன.

2019 ஐபோன் மாடல்கள் சார்ந்த விவரங்கள் ஐபோன் XS மற்றும் ஐபோன் XR மாடல்கள் அறிமுகமாகும் முன்பே வெளியாக துவங்கிவிட்டன. அவ்வாறு புதிய ஐபோன்களில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் பற்றிய விவரங்கள் கிடைத்திருக்கின்றன.

2019 ஐபோன் மாடல்களில் ஆப்பிள் நிறுவனம் OLED டிஸ்ப்ளேக்களை வழங்கலாம் என கூறப்படுகிறது. எனினும் ஐபோன் XR சீரிசில் மட்டும் எல்.சி.டி. டிஸ்ப்ளேவுக்கு மாற்றாக LED ரக டிஸ்ப்ளே வழங்கலாம். OLED டிஸ்ப்ளேக்களின் விலை அதிகமாக இருப்பதே ஒரு மாடலில் மட்டும் LED டிஸ்ப்ளே வழங்குவதற்கான காரணமாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்யவிருக்கும் ஐபோன்களில் ஆப்பிளின் ஏ13 சிப்செட்களை கொண்டிருக்கும். ஆப்பிள் வழக்கப்படி புதிய சிப்செட்கள் அவற்றின் முந்தைய சீரிசை விட அதிக மேம்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கலாம். அந்த வகையில் ஆப்பிள் ஏ13 சிப்செட் அதிக சக்திவாய்ந்ததாகவும், புதிய தொழில்நுட்பங்களையும் கொண்டிருக்கலாம்.

2019 ஐபோன்களில் ஆப்பிள் நிறுவனம் மூன்று பிரைமரி கேமரா சென்சார்களை வழங்கலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய ஐபோன்களில் டெப்த் அம்சங்களையும் தெளிவாக படமாக்க முடியும். இத்துடன் ட்ரூ-டெப்த் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி அம்சம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

ஆப்பிள் தனது ஐபோன்களில் மூன்று கேமரா சென்சார் வழங்கும் பட்சத்தில் 2019 ஐபோன்களில் 3x ஆப்டிக்கல் சூம் வசதி மற்றும் தெளிவான புகைப்படங்கள் கிடைக்கும் என உறுதியாக எதிர்பார்க்கலாம். இதேபோன்று புதிய ஐபோன்களின் முன்பக்க ட்ரூ-டெப்த் கேமரா அதிகம் மேம்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

இத்துடன் புதிய ஐபோன்களில் சிறிய நாட்ச் அல்லது நாட்ச் இல்லாத வடிவைப்பு கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இவ்வாறு செய்ய ஆப்பிள் எவ்வித தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் என்பது பற்றி எவ்வித விவரங்களும் இல்லை. ஐபோன் XR மாடலில் ஆப்பிள் நிறுவனம் 3டி டச் வசதியை எடுத்துவிட்டு புதிதாக ஹேப்டிக் டச் அம்சத்தை வழங்கியிருந்தது.