நடிகர் தனுஷ் அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகளை இன்று சந்தித்தார். தனது ரசிகர் மன்றத்தை வலுப்படுத்தும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர், பாடலாசிரியர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என திரைத் துறையின் பெரும்பாலான துறைகளில் கால்பதித்து வெற்றி பெற்றுள்ள தனுஷ்,  தமிழ் சினிமா தொடங்கி ஹாலிவுட் வரை சென்றுள்ளார். தற்போது அவரது நடிப்பில் வடசென்னை, மாரி-2, எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் தனது ரசிகர் மன்றத்திற்கு அறிக்கை அனுப்பியிருந்த தனுஷ், ரசிகர் மன்றத்தின் தலைவராக சுப்ரமணியம் சிவாவையும் செயலாளராக பி.ராஜாவையும் நியமித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் ரசிகர் மன்றத்தின் நிர்வாகிகளை நேரில் சந்தித்துள்ளார். மேலும் தனது ரசிகர் மன்றத்தை வலுப்படுத்தும் பணியில் தனுஷ் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ரஜினிகாந்தின் அரசியல் வருகைக்கு பின்பு நடிகர் தனுஷ் ரஜினி ஸ்டைலில் ரசிகர்களை அணுகி வருவதும் குறிப்பிடத்தக்கது.