இந்தியாவின் பிரபல வழக்கறிஞரும், அடல் பிகாரி வாஜ்பேயி அரசாங்கத்தில் சட்ட அமைச்சராகவும் பதவி வகித்த ராம் ஜெத்மலானி இன்று காலமானார். அவருக்கு வயது 95.

1996இல் வாஜ்பேயி தலைமையில் அமைந்த அரசில் சட்ட அமைச்சராக பதவியேற்றார். எனினும், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் அந்த அரசு 13 நாட்களில் கவிழ்ந்தது.

பின்னர் 1998 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபின் நகர்ப்புற வளர்ச்சி, சட்டம் ஆகிய துறைகளுக்கு அமைச்சராக இருந்தார்.

எனினும் அப்போது உச்ச நீதிமன்றத் தலைமை ஏ.எஸ்.ஆனந்த் மற்றும் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜீ ஆகியோருடன் ராம் ஜெத்மாலனிக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவரை தமது அமைச்சரவையில் இருந்து விலக வாஜ்பேயி அறிவுறுத்தினார். அதன்பின் ராம் ஜெத்மலானி பதவி விலகினார்.

செப்டம்பர் 1, 1923ஆம் ஆண்டு பிறந்த அவர், பல முக்கிய கிரிமினல் வழக்குகளில் வாதாடியுள்ளார்.

தற்போது பாகிஸ்தானில் இருக்கும் சிந்து மாகாணத்தில் உள்ள ஷிகர்பூரில் பிறந்த ராம் ஜெத்மலானி, பிரிவினையின் போது இந்தியாவுக்கு வந்தார். தனது 17வது வயதில் சட்டம் படித்து பட்டம் பெற்றார் ராம் ஜெத்மலானி.

அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

2014 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்பு நரேந்திர மோதிக்கு ஆதரவாக இருந்த அவர், தேர்தலுக்கு பிறகு எதிராக மாறினார். பாஜக சார்பாக இருமுறை மக்களவை எம்பி-யாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் அருண் ஜேட்லி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்தபோது, கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக வாதாடினார் ஜெத்மலானி.