மீள் குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை வலுவூட்டுவதற்கான வேலைத் திட்டங்கள் இனங் காணப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (10) தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டின் பின்னர் வட மாகாண வீடமைப்பு அபிவிருத்திப் பணிகளுக்கென 24 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்திய அரசாங்கத்தின் உதவியோடு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

யுத்தத்தின் பின்னர் வட மாகாணத்தின் அபிவிருத்திக்கென விசேட வேலைத் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இதேவேளை, சோபா உடன்படிக்கையில் சமகால அரசாங்கம் கைச்சாத்திடவில்லை என்று பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க இன்று சபையில் முன்வைத்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த பிரதமர் 1995 ஆம் ஆண்டில் கைச்சாத்திட்ட உடன்படிக்கை தொடர்பாக இரு தர்ப்புக்கு இடையில் பேச்சுவார்ததை நடத்தப்படுவதாக கூறினார்.

மேலுத், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடையவர்கள் பற்றி தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.

167 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் 61 பேர் குற்றபுலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும் 99 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

சம்பவத்துடன் நேரடியாக அல்லது மறைமுகமாக தொடர்புபட்டவர்கள் பற்றிய விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

ஹெட்டிபொல, குளியாபிட்டிய பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புடைய 39 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இந்தப் பிரதேசங்களில் சேதமாக்கப்பட்ட பள்ளிவாசல்கள், சொத்துக்கள் என்பன பற்றி மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. பயங்கரவாதத் தாக்குதலால் சேதமடைந்த கிறிஸ்தவ தேவாலயங்களுக்கான முதற்கட்ட இழப்பீட்டுக் கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் பாராளுமன்றத்தில் மேலும் தெரிவித்தார்.