தென்மேற்கு பருவமழை கடந்த 8-ம் தேதி தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக தற்போது மாறி இருக்கிறது. இந்த புயலுக்கு வாயு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இது தீவிர புயலாக மாறி மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் குஜராத் நோக்கி நகருகிறது. குஜராத் மாநிலம் விராவல் பகுதி அருகே புயல் வியாழக்கிழமை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குஜராத்தில் புயல் தாக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வாயு புயல் எதிரொலியாக, குஜராத்தில் உள்ள 10 மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து முதல் மந்திரி விஜய் ரூபானி உத்தரவிட்டார். மேலும், புயல் தாக்கினால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிகை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.