அமெரிக்கா-பிரான்ஸ் நாடுகளுக்கு இடையிலான 250 ஆண்டுகால நட்புறவை கொண்டாடும் வகையில் பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரான் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வாஷிங்டன் நகருக்கு வந்திருந்தார்.

அப்போது இருநாடுகளுக்கு இடையிலான வலிமையான நட்பை நினைவுகூரும் விதமாக வெள்ளை மாளிகையின் தெற்கு பகுதியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் – எம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் ஒன்றாக இணைந்து ஒரு கருவாலி மரக்கன்றை நட்டனர்.

‘அமெரிக்கா-பிரான்ஸ் நட்பு மரம்’ (oak of friendship) என்று அழைக்கப்பட்ட இந்த மரம்நடுவிழா அப்போது உலக ஊடகங்களில் மிக முக்கிய செய்தியாக வெளியானது. இந்நிலையில், இந்த நட்பு மரம் பட்டுப்போய் செத்து விட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு வெள்ளை மாளிகை அதிகாரிகளின் மிதமிஞ்சிய கட்டுப்பாடுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த மரக்கன்றினால் அதிபரின் வெள்ளை மாளிகை தோட்டத்தில் உள்ள மற்ற செடி வகைகளுக்கு எந்த பாதிப்பும் உண்டாக கூடாது என்ற நோக்கத்தில் நட்பு மரத்தின் மீது அதிகாரிகள் சில தெளிப்பான்களை தொடர்ந்து பயன்படுத்தியதால் அந்த மரம் இறந்து விட்டதாக சில செய்திகள் குறிப்பிடுகின்றன.