தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். எனினும் அதிலிருந்து இன்னும் சிக்னல் கிடைக்கப் பெறவில்லை.

சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் விண்ணுக்கு அனுப்பியது. இது நிலவின் தென் துருவத்தில் ஆராய்ச்சியை மேற்கொள்ள அனுப்பப்பட்டது. 40 நாட்கள் கழித்து சந்திரயான் 2 விண்கலத்தை சுற்று வட்ட பாதையில் நிலைநிறுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் கட்டளைகளை பிறப்பித்தனர். இந்த மாதம் முதல் வாரத்தில் ஆர்ப்பிட்டரிலிருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்தது. இது வெற்றிக்கரமாக நிகழ்ந்தது.

இதையடுத்து விக்ரம் லேண்டரை தரையிறக்கும் முயற்சி நேற்று அதிகாலை 1.30 மணிக்கு நடந்தது. அப்போது நிலவுக்கு மேல் 2.1 கி.மீ. தூரத்தில் இருந்த விக்ரம் லேண்டரின் தொடர்பை இஸ்ரோ இழந்தது. இதனால் சந்திரயான் 2 எதிர்பார்த்தபடி நிலவில் இறங்கவில்லை. இதையடுத்து இஸ்ரோ தலைவரும், விஞ்ஞானிகளும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

இன்னும் 14 நாட்களுக்குள் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிப்போம் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருந்தார். லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்த போதிலும் ஆர்ப்பிட்டர் கருவி நிலவை சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் லேண்டர் எங்கே இருக்கிறது என்பது குறித்து ஆர்ப்பிட்டர் கருவி புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. எனினும் அதன் சிக்னல் கிடைக்கவில்லை.

அந்த லேண்டர் நிலவின் மேற்பரப்பில்தான் விழுந்துள்ளது. நிலவில் இறங்க வேண்டிய இடத்திற்கு 500 மீட்டர் தூரத்தில் லேண்டர் இருக்கிறது. 2.1. கி.மீ. தூரத்தில் லேண்டர் இருந்த நிலையில் நிலவில் எடை 6-இல் ஒரு பங்கு இருக்கும் என்பதால் கீழே விழுந்த லேண்டர் எந்தவித சேதாரம் அடைந்திருக்காது என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.