வட­ப­குதி தமிழ் மக்­கள் மத்­தி­யில் நில­வும் விடு­த­லைப் புலி­க­ளின் ஆத­ரவு மன­நிலை குறித்து ஆய்ந்­த­றிந்து அதற்­கான நட­வ­டிக்கை தொடர்­பாக தீர்­மா­னிப்­ப­தற்­காக சட்­டம் ஒழுங்கு அமைச்­சர் பிரதி அமைச்­சர் மற்­றும் பொலிஸ்மா அதி­பர் ஆகி­யோர் அண்­மை­யில் வட­ப­கு­திக்­குப் பய­ணம் மேற்­கொண்­டி­ருந்­த­னர்.

நாட்­டின் வடக்கு மற்­றும் கிழக்கு பிர­தே­சங்­க­ளில் மட்­டு­மல்­லா­மல் நாட்­டின் ஏனைய பிர­தே­சங்­க­ளில் வாழும் தமிழ் மக்­கள் மத்­தி­யி­லும் விடு­த­லைப் புலி­கள் மீதான ஆத­ரவு மன­நிலை நில­வு­வ­ தொன்­றும் புதி­தல்ல. சிங்­கள மற்­றும் முஸ்­லிம் மக்­கள் மத்­தி­யில் விடு­த­லைப் புலி­கள் மீதான விரோத மனப்­பான்மை நில­வு­வ­து­போன்று தமிழ் மக்­க­ளில் பெரும்­பா­லானோர் மத்­தி­யில் விடு­த­லைப் புலி­கள் மீதான ஆத­ரவு மனப்­பாங்கு நிலவி வரு­வது இர­க­சி­ய­மா­ன­தொன்­றல்ல.

இந்த நிலை­யில் நாட்­டின் பாது­காப்பு விட­யத்­து­டன் தொடர்­பு­டைய அர­சின் உயர் மட்­டத்­தைச் சேர்ந்த மூவர், விடு­த­லைப் புலி­கள் மீதான ஆத­ரவு அலை குறித்து ஆராய்­வ­தற்­காக வட­ப­கு­திக்கு வந்­தி­ருந்­தமை விடு­த­லைப் புலி­க­ளுக்கு ஆத­ர­வான போக்கு தமிழ் மக்­கள் மனங்­க­ளில் தற்­போது உயர்வு கண்­டி­ருப்­ப­தாக அரச தரப்­பி­னர் உணர்­வ­த­னால் தான்போலும்.

சிறப்­பாக விடு­த­லைப் புலி­க­ளது மீளு­ரு­வாக்­கம் குறித்து தமிழ் மக்­கள் அக்­கறை கொண்­டி­ருப்­ப­தாக முன்­னாள் சிறு­வர் விவ­கார இரா­ஜாங்க அமைச்­சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் கடந்த 4ஆம் திக­தி­யன்று யாழ்ப்­பா­ணத்­தில் வைத்து கருத்து வெளி­யிட்­ட­தன் பின்­னரே அர­சின் இந்த உயர்­மட்­டக் குழு­வி­னர் யாழ்ப்­பா­ணத்­துக்­கான தமது பய­ணம் குறித்து முடி­வு­செய்­தி­ருக்­கக்­கூ­டும்.

விடு­த­லைப் புலி­க­ளுக்­கான ஆத­ரவு
அண்மைக்­கா­ல­மாக அதி­க­ரித்­துள்­ளதா

அண்­மைக் கால­மாக அடிக்­கடி விடு­த­லைப் புலி­க­ளுக்கு ஆத­ர­வான போக்கு, மற்­றும் கருத்து வெளிப்­பாடு தொடர்­பான செய்­தி­கள் வெளி­வ­ரு­வ­தால் வட­ப­கு­தி­யில் அத்­த­கைய நிலைப்­பாடு பொது­மக்­கள் மத்­தி­யில் அதி­க­ரித்து வரு­கி­றது என கணிப்­பி­டு­வது நியா­ய­மா­னதே. ஆனா­லும் வடக்கு மற்­றும் கிழக்கு மாகா­ணங்­க­ளின் பொது­மக்­கள் விடு­த­லைப்­பு­லி­க­ளின் அமைப்­புத் தொடர்­பாக அனு­ப­வங்­கள் கார­ண­மான புதிய நிலைப்­பாட்­டில் இருப்­ப­தால் தீடி­ரென இத்­த­கைய கருத்து நிலைப்­பா­டொன்று உரு­வா­கி­யி­ருக்­கக்­கூ­டும் என எண்ண இய­லாது.

தற்­போது யதார்த்த நிலை என்­ன­வெ­னில், போர் ஒரு பயங்­க­ர­மான சூழ­லில் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்ட நோக்­கத்­தால் கடும் அச்ச வசப்­பட்ட தமிழ் மக்­கள் கடந்த சில ஆண்­டு­க­ளாக விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு ஆத­ர­வான தமது மன உணர்­வு­களை மன­துக்­குள் அடக்கி வைத்­தி­ருந்­த­னர். தற்­போது அந்த அச்ச உணர்வு வில­கிப்­போ­யுள்­ள­தால் விடு­த­லைப்­பு­லி­கள் தொடர்­பாக அவர்­க­ளது ஆத­ரவு உணர்வு மீண்­டும் வெளிக்­கி­ளம்­பி­யுள்­ளது.

2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் நாளன்று அரச படை­யி­ன­ருக்­கும், விடு­த­லைப் புலி­க­ளுக்­கும் இடை­யே­யான போர்­மு­டி­வுக்கு வந்­த­தை­ய­டுத்து தமிழ்­மக்­கள் விடு­த­லைப் புலி­க­ளுக்கு ஆத­ர­வான கருத்­தெ­த­னை­யும் வெளிப்­ப­டுத்­தாது மௌனம்­காத்த கால­கட்­ட­மொன்று இருந்­தது.

தனிப்­பட்ட ரீதி­யில் ஒரு தரப்­பி­னர் தம் மத்­தி­யில் விடு­த­லைப்­பு­லி­கள் தொடர்­பாக அனு­தா­பக் கருத்­துக்­களை இர­க­சி­ய­மான விதத்­தில் வெளிப்­ப­டுத்தி வந்­தி­ருப்­பி­னும் போரில் உயி­ரி­ழந்த விடு­த­லைப் புலி­கள் இயக்க உறுப்­பி­னர்­க­ளுக்­கான நினைவு நிகழ்­வு­களை நடத்­து­வது குறித்து அந்­தக் கால­கட்­டத்­தில் எவ­ரா­லும் சிந்­தித்­துப்­பார்க்­கக்­கூட இய­லாது போயி­ருந்­தது.

கடந்த அர­சின் தலை­வர்­க­ளது கருத்­தின்­படி அரச தமிழ்­மக்­கள் விடு­த­லைப் புலி­கள் அமைப்­பைப் புறக்­க­ணித்­த­தாலோ அல்­லது மகிந்த அர­சின் செயற்­பா­டு­க­ளைத் தமிழ் மக்­கள் ஏற்­றுக்­கொண்­ட­தாலோ ஏற்­பட்ட நிலமை அல்ல. அரச இயந்­தி­ரத்­தின் மீதான அச்­சம் மற்­றும் குழப்­பம் கார­ண­மாக ஏற்­பட்ட நிலைப்­பாடே அது­வா­கும்.

ஆனால் காலப்­போக்­கில் இத்­த­கைய நிலைப்­பாட்­டில் மாற்­றம் ஏற்­பட்­டது. இன்று வடக்கு மற்­றும் கிழக்­குப் பிர­தே­சங்­க­ளில் வெளிப்­ப­டை­யா­கவே விடு­த­லைப் புலி­க­ளது மாவீ­ரர் தின நினைவு நிகழ்வு மற்­றும் கரும்­பு­லி­கள் தின நினைவு நிகழ்வு என்­ப­வற்­றைக் கடைப்­பி­டிக்­கும் அள­வுக்கு நிலமை மாற்­றம் கண்­டுள்­ளது. பிரி­வி­னை­வா­தத்தை ஆத­ரிக்­க­மாட்­டோ­மென சத்­தி­யப் பிர­மா­ணம் எடுத்­துக்­கொண்டு பத­வி­யேற்ற நாடா­ளு­மன்ற மாகாண சபை மற்­றும் உள்ளூராட்சி மன்­றங்­க­ளுக்­குத் தெரி­வான உறுப்­பி­னர்­கள் கூட இத்­த­கைய விடு­த­லைப் புலி­கள் நினை­வேந்­தல் நிகழ்­வு­க­ளில் பங்­கேற்று வரு­கின்­ற­னர்.

வெளிப்­ப­டை­யாக நினை­வு­கூ­ரப்­ப­டும்
விடு­த­லைப் புலி­க­ளின் நினை­வலை

போர் முடி­வுக்கு வந்­த­தன் பின்­னர், அண்­மைக் கா­லம்­வரை வடக்கு -– கிழக்குப் பகு­தி­க­ளில் போரில் உயி­ரி­ழந்த விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் உறுப்­பி­னர்­கள் அவர்­க­ளது உற­வி­னர்­க­ளால் போரில் உயி­ரி­ழந்த தமது உற­வி­னர்­களை நினைவு கூர்­கி­றோம் என்ற போர்­வை­யி­லேயே நினைவு கூரப்­பட்டு வந்­த­னர்.

உற­வி­னர்­களை நினைவு கூர்­வது சட்­டப்­படி தவ­றல்ல என்ற போதி­லும், அவர்­கள் அவ்­வி­தம் தமது உற­வி­னர்­களை நினைவு கூர்­வ­தா­கக் கூறிக்­கொண்டு நினைவு கூர்ந்த நாள்­க­ளெல்­லாம் விடு­த­லைப் புலி­கள் அமைப்­புக்கு முக்­கிய நினை­வு­கூ­ரல் தினங்­க­ளாக அமைந்த நாள்­க­ளி­லேயே ஆகும். அவற்­றில் ஒன்று நவம்­பர் 27ஆம் திக­தி­யா­கிய மாவீ­ரர் தின­மா­கும். மற்­றை­யது போரின் முடி­வின் போது விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வர் பிர­பா­க­ரன் உயி­ரி­ழந்த தின­மெ­னப் பல­ரும் கரு­தும் மே மாதம் 19ஆம் திக­தி­யா­கும்.

விடு­த­லைப் புலி­கள் அமைப்­பால் பல ஆண்­டு­க­ளா­கத் தொடர்ச்­சி­யாக நினை­வு­கூ­ரப்­பட்டு வந்த கரும்­பு­லி­கள் தினம் போர் முடி­வுக்கு வந்­த­தன் பின்­னர் இவ்­வாண்­டின் கடந்த ஜூலை 5ஆம் திக­தி­வரை வெளிப்­ப­டை­யாக எந்த இடத்­தி­லும் கடைக்­கொள்­ளப்­பட்­ட­தில்லை. ஆனா­லும் அது இந்த ஆண்­டில் பகி­ரங்­க­மாக தமிழ் மக்­க­ளால் கடைக் கொள்­ளப்­பட்­டது.

அதே­போன்று பிரி­வி­னை­வா­தத்­துக்கு ஆத­ர­வ­ளிக்­க­மாட்­டோ­மென சத்­தி­யப் பிர­மா­ணம் செய்து பத­வி­யேற்ற யாழ்ப்­பாண மாந­க­ர­சபை உறுப்­பி­னர்­கள் கடந்த மாதத்­தில் இரு விடு­த­லைப் புலி­கள் இயக்க உறுப்­பி­னர்­களை நினை­வு­கூ­ரும் வகை­யில் உரு­வாக்­கப்­பட்ட உரு­வச்­சி­லை­களை புன­ர­மைப்­ப­தற்­கான மாந­க­சபை அமர்­வின்­போது பிரே­ர­ணை­யொன்றை முன்­வைத்து நிறை­வேற்­றிக் கொண்­டுள்­ள­னர்.

அவற்­றில் ஒன்று 1987ஆம் ஆண்­டில் இந்­திய அமை­திப் படை­யி­டம் ஐந்து அம்­சக் கோரிக்­கை­யொன்றை முன்­வைத்து யாழ்ப்­பா­ணம் நல்­லூர் கந்­த­சாமி கோவில் வீதி­யில் 12 நாள்­க­ளாக உணவை ஒறுத்­துப் போராடி உயிர்­நீத்த அவ்­வே­ளைய யாழ்ப்­பாண மாவட்ட விடு­த­லைப் புலி­க­ளது மாவட்­டத் தலை­வன் திலீ­ப­னது உரு­வச்­சி­லை­யா­கும். அவற்­றில் இரண்­டா­வது உரு­வச்­சிலை யாழ். மாவட்ட விடு­த­லைப் புலி­க­ளது பொறுப்­பா­ள­ரா­க­வி­ருந்த கிட்டு என்ற இயக்­கப் பெயர் கொண்­டி­ருந்த சதா­சி­வம் கிருஷ்­ண­கு­மா­ரது உரு­வச்­சி­லை­யா­கும்.

அந்த வகை­யில் தமிழ் மக்­கள் மத்­தி­யில் மீண்­டும் தலை­யெ­டுத்து வரும் விடு­த­லைப் புலி­கள் ஆத­ரவு மனப்­பாங்கு அண்­மை­யில் முன்­னாள் சிறு­வர் விவ­கார இரா­ஜாங்க அமைச்­சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னால் பொது நிகழ்­வொன்­றில் வைத்து வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது. இந்த நாட்­டின் தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் மேற்­கு­றித்த விடு­த­லைப் புலி­கள் ஆத­ரவு மனப்­பாங்கை சூட்­சு­ம­மான விதத்­தில் முன்­னர் பல சந்­தர்ப்­பங்­க­ளில் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­த­போ­தி­லும் தற்­போது விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் வெளிப்­ப­டை­யாக அதனை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார். ஆயி­னும் அதன் பின்­ன­ணி­யில் மறை­மு­க­மாக வேறு பல­ரும் உள்­ள­தா­க­வும் கரு­த­மு­டி­கி­றது.

விஜ­ய­க­லா­வின் கருத்­தும்
ஆத­ர­வும் எதிர்ப்ப­லை­யும்

விடு­த­லைப்­பு­லி­கள் அமைப்பு செயற்­பட்ட காலத்­தில் நாட்­டின் வடக்கு மற்­றும் கிழக்­குப் பகு­தி­க­ளில் பெண்­க­ள­தும், சிறு­வர்­க­ள­தும் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது என்­பதை வெளிப்­ப­டுத்­து­வதே தமது நோக்­க­மாக இருந்­த­தாக விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் பின்­னர் விளக்­கம் தெரி­வித்­தி­ருந்­தார்.

அதன் பிர­கா­ரம் அவர் விடு­த­லைப் புலி­களை பாராட்டி முத­லில் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்த கருத்து வார்த்தைப் பயன்பாடு தவறாக இருந்­தி­ருக்­கக்­கூ­டும். தென் பகு­தி­யில் அவ­ரது அந்­தக் கருத்­துக்கு கடும் விரோ­தம் பாராட்­டப்­பட்­ட­போ­தி­லும், தமி­ழர் தரப்பு அர­சி­யல்­வா­தி­க­ளில் சிலர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னது நிலைப்­பாட்­டுக்கு ஆத­ர­வாக கருத்து வெளி­யிட்­டும் இருந்­த­னர். எப்­போ­துமே தென்­ப­கு­தித் தரப்­பி­னர்­களை விமர்­சித்து வரும் வட­மா­கா­ண­சபை முதல்­வர் க.வி.விக்­னேஸ்­வ­ரன், மற்­றும் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் அனந்தி சசி­த­ரன் ஆகி­யோர் இவர்­க­ளில் குறிப்­பி­டத்­தக்­க­வர்­க­ளா­வர்.

குறித்த இந்த விடு­த­லைப்­பு­லி­கள் ஆத­ரவு நிலைப்­பாடு ஒரு புதிய விட­யமே என அரசு விளக்­க­ம­ளிக்க முயல்­வ­தா­கத் தோன்­று­கி­றது. ஆனால் இது முன்­னாள் அர­ச­த­லை­வர் மகிந்­த­வுக்­கும் அவ­ரது ஆத­ர­வா­ளர்­க­ளுக்­கும் தேன்­போன்று சுவை­ய­ளிக்­கும் ஒரு விட­ய­மாக இருக்­கக்­கூ­டும். ஏனெ­னில் தற்­போ­தைய கூட்­டாட்சி அர­சின் நிர்­வா­கத்­தில் விடு­த­லைப்­பு­லி­கள் அமைப்பு மீண்­டும் தலை­தூக்க ஆரம்­பித்­துள்­ளனர் எனக் குற்­றஞ்­சாட்ட இது அவர்­க­ளுக்­கோர் நல்­வாய்ப்­பாக அமை­கி­றது.

ஆனால் உண்­மை­யான நிலை அது­வல்ல. விடு­த­லைப்­பு­லி­கள் அமைப்­புத் தொடர்­பாக நாட்­டின் வடக்கு மற்­றும் கிழக்கு பிர­தேச தமிழ்­மக்­கள் தமது ஆத­ரவு மன­நி­லையை குறிப்­பிட்­ட­தொரு சிறி­ய­கால இடை­வெ­ளிக்கு மட்­டுமே தமது மனங்­க­ளில் ஒரு மூலை­யில் ஒதுக்கி மறைத்து வைத்­தி­ருந்­த­னர்.
பின்­னர் வட­ப­குதி அர­சி­யல்­வா­தி­கள் விடு­த­லைப்­பு­லி­கள் குறித்த ஆத­ரவு மன­நி­லையை முத­லில் வெளிப்­ப­டுத்த ஆரம்­பித்­த­னர். ஆனால் காலப்­போக்­கில் அந்த உணர்வு மெல்ல மெல்ல வெளிப்­பட்­டா­லும் இன்­று­போல முற்­று­மு­ழு­தான விதத்­தில் கருத்து வெளிப்­பா­டாக வெளி­வ­ர­வில்லை.

கடந்த அர­சின் காலத்­தில் விடு­த­லைப்­பு­லி­கள் அமைப்பை மீண்­டும் முன்­னி­லைக்­குக் கொண்­டு­ வ­ரும் விதத்­தி­லான மூன்று முக்­கிய முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. ஆயி­னும் அவை­கு­றித்து அரசு அவ­தா­னத்­து­டன் செயற்­பட்­ட­தன் கார­ண­மாக அத்­த­கைய முயற்­சி­கள் எது­வும் சாத­க­மான பயனை நல்­க­வில்லை.
போர் முடி­வுக்கு வரு­வ­தற்கு முன்­பி­ருந்தே விடு­த­ லைப்­பு­லி­கள் அமைப்பு தமிழ் மக்­க­ளது மனங்­க­ளில் முக்­கிய இடம்­பி­டித்­தி­ருந்­தது.
விடு­த­லைப்­பு­லி­கள் அமைப்பு தமிழ் மக்­க­ளி­ட­மி­ருந்து பெருந்­தொகை பணத்தை வரி­க­ளாக அற­விட்­ட­போ­தி­லும் தமிழ் மக்­க­ளது சிறு பிள்­ளை­க­ளைக்­கூட தமது அமைப்­பில் இணை­யச்­செய்து போரா­ளி­க­ளாக உரு­வாக்­கிய போதி­லும் தமிழ் மக்­கள் அர­சுக்கு ஆத­ர­வாக செயற்­ப­ட­வில்லை. போரொன்­றின்­போது தமக்­குப் பாது­காப்­பா­கச் செயற்­ப­டும் தரப்­புக்கு பொது­மக்­க­ளது ஆத­ரவு கிட்­டு­வது இயற்­கை­யா­ன­தொன்றே.

போரின் இறு­தி­யில் தாம் சந்­திக்க நேர்ந்த பயங்­கர அனு­ப­வங்­கள் கார­ண­மாக தமிழ் மக்­கள் விடு­த­லைப்­பு­லி­கள் அமைப்­புக்­கு­றித்து பேசிக்­கொள்­வ­தற்­குக்­கூட அஞ்­சி­னர். அதே வேளை போரின் இறுதி வேளை­யில் விடு­த­லைப்­பு­லி­கள் அமைப்பு செயற்­பட்ட விதம் குறித்­தும் பொது­மக்­கள் மத்­தி­யில் குழப்­ப­மும் கவ­லை­யும் நில­வின. போர் முடி­வுக்கு வந்து இத்­தனை ஆண்­டு­கள் கடந்­து­விட்ட நிலை­யி­லும் நாட்­டில் அமை­தி­யும் சமா­தா­ன­மும் உரு­வா­காத ஒரு சிக்­க­லான சூழ்­நிலை நில­வு­வது கவ­லைக்கு உரி­ய­தொன்றே. அர­சி­யல் கருத்து வேறு­பா­டு­க­ளால் நாடே குழம்­பிப்­போ­யுள்­ளது எனக் கூறு­வ­தில் தவறு எது­வு­மில்லை.