விண்வெளியில் உள்ள சர்வதேச வானியல் ஆய்வு மையத்திலிருந்த 3 விஞ்ஞானிகள் பூமிக்குத் திரும்பியுள்ளனர்.

Expedition 55 என்ற குழு விண்வெளியில் உள்ள சர்வேதச வானியல் ஆய்வு மையத்திற்குச் சென்றது. இதில் இடம்பெற்றிருந்த நாசா விஞ்ஞானி ஸ்காட் டிங்கில், ஜப்பானைச் சேர்ந்த விஞ்ஞானி நரிஷிகே கனாய் மற்றும் ரஷ்ய விஞ்ஞானி அன்டன் ஸ்கப்லெரோவ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பூமிக்குத் திரும்பினார்கள். 168 நாட்களுக்குப் பின் அவர்கள் பாராசூட் மூலம் அவர்கள் கஜகஸ்தானில் தரை இறங்கியுள்ளனர்.

இந்த மூன்று பேரில் டிங்கில் மற்றும் கனாய் ஆகியோர் முதல் முறையாக விண்வெளிக்குச் சென்றுள்ளனர். மற்றொரு விஞ்ஞானி ஸ்கப்லெரோவுக்கு இது 3வது பயணம். இதுவரை அவர் 532 நாட்கள் விண்வெளியில் தங்கியுள்ளார்.

இம்முறை அன்டன் ஸ்கப்லெரோவ், விண்வெளியில் 8 மணி நேரம் நடத்த உலக சாதனையையும் நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.